பிள்ளையானின் அலுவலகம் முற்றுகை!

 


மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமை காரியாலயம் ஆர்ப்பாட்டக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டதனால் அப்பகுதியில் பதற்ற நிலையேற்பட்டுள்ளது.

விலைவாசி ஏற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை கண்டித்தும் அரசாங்கத்தினை பதவி விலக கோரும் நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


இன்று மாலை மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,பிரதி முதல்வர் க.சத்தியசீலன் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள்,ஆதரவாளர்கள்,பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.


முட்டக்களப்பு - கல்லடி பாலத்தில் இருந்து ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக திருமலை வீதியூடாக மட்டக்களப்பு நகர் வரையில் பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணி காரணமாக போக்குவரத்து நீண்டநேரம் பாதிக்கப்பட்டதுடன் நகருக்குள் வந்த பேரணியானது வாவிக்கரை வீதியூடாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமை காரியாலயம் வரையில் சென்று காரியாலயத்திற்கு முன்பாக கோசங்கள் எழுப்பப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்றைய நிலையை உணர்ந்து மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பதவியை இராஜினாமா செய்து அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவினை விலக்கிக்கொள்ளவேண்டும் என கோசங்கள் எழுப்பப்பட்டன.

ஊர்வலமானது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமை காரியாலயம் நோக்கி சென்ற காரியாலயத்திற்கு முன்பாக காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

No comments