பாராளுமன்ற பகுதியில் பரபரப்பு!





பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று (05) காலை 10 மணிக்கு கூடவுள்ளது. பாராளுமன்ற வளாகத்திலும், பாராளுமன்றத்தை சுற்றியிருக்கும் பிரதான வீதிகளிலும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கக் கூடும் என்ற அச்சத்தில், பல்லடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு மேலதிகமாக, கலகமடக்கும் பொலிஸாரும் களத்தில் இறக்குவதற்கு தயார் நிலையில் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே இன்றைய தினம் பாராளுமன்றம் மற்றும் அதன் வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற பாதுகாப்பு தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று(04) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்படுகின்ற ஆர்ப்பாட்டங்களை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்றில் 113 என்ற பெரும்பான்மையை காண்பிக்கும் குழுவுக்கு அரசாங்கத்தை கையளிக்க தயாராகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இதேவேளை, ஆளும் தரப்பில் அங்கம் வகித்த பங்காளி கட்சிகளின் உறுப்பினர்கள் இன்று சுயாதீனமாக செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், பாராளுமன்ற ஆசனங்களிலும் மாற்றம் ஏற்படலாம்.

No comments