வேண்டவே வேண்டாம்!

 



ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டமும், இனிமேல் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டமும் வேண்டாம் என தெரிவித்து "புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம்" என்ற தொனிப்பொருளில்; கையெழுத்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் ஆரம்பமாகிய போராட்டம், யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் இல்லத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தவத்திரு வேலன் சுவாமிகள், யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார், ஏனைய மதகுருக்கள் சட்டங்களை எதிர்த்து கையொப்பமிட்டனர்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட யாழ்ப்பாணம் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார், நீண்ட காலமாக நடைமுறையில் இருந்த பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலமாக தமிழ் மக்கள் செல்லொணா துயரங்களை அனுபவித்தார்கள். எத்தனையோ பேரின் வாழ்க்கையில் கவலைகளும், வலிகளும், இழப்புக்களும் ஏற்பட்டன.

ஆகவே அவ்வாறான ஒரு சட்டமூலத்தை நீக்குமாறு நீண்ட காலமாக அரசாங்கங்களை, தமிழ் மக்களாகிய நாங்கள் தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டிருந்தோம்.

ஆனால் தற்போது அந்த பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குகின்ற பாணியில் புதிய ஒரு சட்டமூலத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. புதிய சட்டத்தின் மூலமாகவும் தமிழ் மக்களுக்கு பிரதானமான பாதிப்புகள் ஏற்படும்.

அதன்மூலம் அவர்களுடைய வாழ்க்கையானது தொடர்ச்சியாக பயத்தின் மத்தியிலேயே தொடரக்கூடிய வாய்ப்பு உள்ளது.

மக்கள் அனைவரும் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும், அமைதியாகவும், பயமில்லாமலும் வாழக்கூடிய நிலைமையை ஏற்படுத்துவதற்கு பழைய பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கிவிட்டு, புதிதாக எந்த சட்டமூலத்தையும் அறிமுகம் செய்ய வேண்டாம் என்ற கோரிக்கையை அரசாங்கத்திடமும், நீதி அமைச்சிடமும் தமிழ் மக்களாகிய நாங்கள் முன்வைக்கின்றோம்.

எமது இந்த கோரிக்கையை அரசாங்கமானது ஏற்று, தமிழ் மக்களுடைய அபிலாசைகளை பூர்த்தி செய்து தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய நிலையை இந்த நாட்டில் ஏற்படுத்த வேண்டும் எனவும் குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.


No comments