வடபுல விபத்துக்களில் இருவர் மரணம்!வடபுலத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்தேறிய இருவிபத்துக்களில் இருவர் மரணித்தனர்.23பேர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மூளாய் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொருவர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

காரைநகர் கருங்காலியைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை நித்தியானந்தராசா (வயது49) என்பவரே உயிரிழந்துள்ளார். 

யாழ். பல்கலைக்கழக மாணவனான மூளாயைச் சேர்ந்த ஆனந்தகுமார் கஜீபன் என்ற இளைஞரே காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மூளாய் - மாவடி வீதியில், காளி கோயிலுக்கு சமீபமாக இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனிடையே முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் பலர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணம் முல்லைத்தீவு வழித் தடத்தில் பயணிக்கும் தனியார் பஸ் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது

விபத்துக்குள்ளான பஸ்ஸில் சுமார் 40க்கு மேற்பட்ட பயணிகள் பயணித்த நிலையில் ஒருவர் மரணித்ததுடன் 22பேர் படுகாயம் அடைந்த நிலையில் ல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் பஸ் ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் போட்டிபோட்டு ஓடியமையே இந்த விபத்துக்கு காரணம் என சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.


No comments