ஈபிடிபியிற்கு கொலைகளே தெரியாதாம்!



ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய நாம் ஒரு போதும் கொலைகளை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. கொலைகளுக்கூடாகப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர்களுமில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

லண்டனில் போர்க் குற்றங்களோடு தொடர்புபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட கைது தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்திகள் ஊடாக, ஈ.பி.டி.பி மீதான விசமத்தனமான அவதூறுகள் பரப்பப்பட்டுள்ளதால், அதனை கண்டிப்பதாக , ஈழமக்கள் ஜனநாயக கட்சி , ஊடகங்களுக்கு கண்டன அறிக்கை ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர். 

குறித்த அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ் மக்களுக்கு நாம் காட்டிய அரசியல் கொள்கைகளே இன்று நிதர்சனமாகியுள்ள நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மீது தொடர்ச்சியாக சுமத்தப்பட்டு வரும் அவதூறுகளையும், உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்களையும் நாம் கண்டிக்கின்றோம்.


அண்மையில் இலண்டனில் போர்க்குற்றங்களோடு தொடர்புபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட கைதுகள் தொடர்பான செய்திகளை வெளியிட்ட சில ஊடகங்கள், குறித்த சம்பவத்தை ஈ.பி.டி.பியின் மக்கள் நலச் செயற்பாடுகளுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டு மீண்டும் எம்மீது சேறுபூசும் கைங்கரியத்தை அரங்கேற்றி இருக்கினறன.


ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அரசியல் பணியானது, இருப்பதைப் பாதுகாத்துக் கொண்டு எமது மக்கள் பெறவேண்டியதை நடைமுறைச் சாத்தியமான பொறிமுறையூடாகவும், தேசிய நல்லிணக்கத்தின் பாதையிலும் சாதித்துப் பெற்றுக் கொள்வதேயாகும் என்பதை மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வலியுறுத்தி வருவது மட்டுமல்லாது நிரூபித்தும் காட்டி வருகின்றோம்.


அதற்கான எமது ஈடுபாட்டையும், அர்ப்பணிப்பையும் பொறுத்துக் கொள்ளாத பயங்கரவாதிகளும், அவர்களின் படுகொலைகளை நியாயப்படுத்தியும், அவர்களுக்கு துதிபாடியும் பிழைப்பு நடத்தியும் வந்தவர்களால் எமது கட்சியின் பல உறுப்பினர்கள் பலிகொள்ளப்பட்டனர். 


பலர் புலத்தில் வாழமுடியாத கொலை அச்சுறுத்தல் காரணமாக புலம்பெயர்ந்து போனதும் கடந்தகால கசப்பான வரலாறாகும்.


இந்தநிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய நாம் ஒரு போதும் கொலைகளை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. கொலைகளுக்கூடாகப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர்களுமில்லை என்பதை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.


இந்தநிலையில் எம்மீது பல அவதூறுகளை சுமத்தியும் வந்துள்ள தரப்பினர், தற்போதும் எங்கெங்கோ நடந்தேறும் சம்பவங்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியையுடன் தொடர்புபடுத்தி விசமத்தனமான உள்நோக்கத்துடன் செய்தி பரப்புவதானது அவர்களின் அரசியல் ரீதியான உள்நோக்கம் கொண்ட செயலாகும். அத்தகைய செயற்பாடுகளை நாம் கண்டிக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments