யேர்மனியில் நடைபெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டம்
“
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற தியாகதீபம் தீலிபன் அவர்களது வரிகள் தமிழீழமக்களின் மனங்களில் ஒலித்துக்கொண்டே
இருக்கும் விடுதலை மந்திரம். கடந்த 26.02. 2022 யேர்மனி நாட்டில் தமிழர்கள் செறிந்து வாழும் ஐம்பத்துமூன்று நகரங்களில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மனிதச்சங்கிலியாக இணைந்து தமிழீழ தேசத்தின் தன்னாட்சி உரிமையினை வலியுறுத்தி நின்றமை எமது தேசத்தின் தெய்வங்களான மாவீரர்களது கனவுகளை நனவாக்கும் என்ற நம்பிக்கையினை மீளவும் உறுதிப்படுத்தியது.இன்றைய கொரோனா இடர்கால சூழலுக்குள்ளும், மிகவும் குளிரான காலநிலையினையும் பொருட்படுத்தாது எமது மக்கள் வீதிகளில் உணர்வோடு
ஒன்றிணைந்தமை இக்காலகட்டத்தில் நிகழ்ந்த தமிழ்த்தேசிய எழுச்சியின் திருப்புமுனையாகவே நோக்கப்படுகின்றது. இக்கவனயீர்ப்புப் போராட்டத்தினை ஒழுங்குபடுத்துவதிலிருந்து மக்களை போராட்டத்தில் இணைப்பதுவரையிலும் எமது இளையவர்கள் குறிப்பாக மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகள் பெருமளவில் செயலாற்றியமையானது தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களது கொள்கைத் தத்துவங்கள் தலைமுறைகள் பல தாண்டியும் கருக்கொண்டு உயிர்ப்படையும் என்பதனை நிறுவிக்கொண்டது. நிறைவெய்திய மனிதச்சங்கிலிப் போராட்டமானது எமது அடுத்த தலைமுறையினரின் தேசிய எழுச்சியின் தொடர்சங்கிலியாக, ஓரு குறியீட்டு வடிவமாகவும் கருக்கொண்டதனை எம்மால் உணரமுடிந்தது.அனைத்துலக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் முதலாவது சரத்து “எல்லா மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு அவ்வுரிமை காரணமாக அவர்கள் தங்கள் அரசியல் உரிமையினை சுதந்திரமாகத் தீர்மானிக்கின்றனர்.” என வரையறுகின்றது. இந்த அனைத்துலக சட்ட வரையறைகளுக்கு உட்பட்டே எமது அமைதிவழிப் போராட்டங்கள் அமைகின்றன.
எனவே இப்போராட்டங்களின் வாயிலாக நாம் முன் வைக்கும் கோரிக்கைகளை தொடர்ந்தும் அனைத்துலக சமூகம் உதாசீனம் செய்துவிடமுடியாது. இதுபோன்ற போராட்டங்களை இன்னும் வலுப்படுத்துவதன் ஊடாகவே எமது இலட்சியத்தினை நாம் வென்றெடுக்கமுடியும்.
Post a Comment