நளினிக்கு ஒரு மாத பிணை! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள நளினிக்கு ஒரு மாதம் பிணை வழங்க முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைதான நளினிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருக்கின்றார்.

இந்நிலையில் அவருடைய தாயார் பத்மா தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், தனது மகளுக்கு பரோல் வழங்கவேண்டுமென்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது பரிசீலனையில் இருப்பதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அரசிடம் விளக்கம் கேட்டிருந்தனர். இதற்கிடையில் முதலமைச்சரின் தனிப்பிரிவில் நளினியின் தாயார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

இந்நிலையில் இன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா ஆஜராகி நளினியின் தாயாரின் மனு பரிசீலிக்கப்பட்டு 30 நாட்கள் பிணை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும்,இதற்கான உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

No comments