கோதா குழலூத பஸில் சங்கொலிக்க தமிழரின் அரங்காடல் ஆரம்பம்! பனங்காட்டான்


அடுத்த வருடத்துக்குள் புதிய அரசியலமைப்பு ஒன்றை வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்றே கோதபாய சொன்னாரே தவிர, புதிய அரசியலமைப்பு உறுதி என்று கூறவில்லை. அது போன்றதே, அடுத்த மார்ச்சுக்குள் மாகாண சபைத் தேர்தல் என்ற பஸிலின் அறிவிப்பும். இந்த அறிவிப்புகளின் உள்ளர்த்தம் சிங்களவருக்குப் புரியும். ஆனால், தமிழர் அரசியல்வாதிகள் அறுந்த கயிற்றில் தொங்கியவாறு ஏர்பூட்டு நிகழ்வையும், முதலமைச்சர் நியமனத்தையும் வழங்கி ஆகாயத்தில் நடக்கின்றனர்.


இலங்கையில் இப்போது ஓர் அரசியல் சுனாமி ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணிகள் பல. இதனால் ஏற்படும் பாதக நிலை இனங்களுக்கிடையிலான முறுகல் ஏற் படுவதைவிட, சிங்கள மக்களுக்கிடையே பெரும் வெடிப்பை ஏற்படுத்துகிறது.

இதற்கான முக்கிய அம்சமாக, சமகாலத்தில் மூன்று அரசாங்கங்கள் இங்கு ஆட்சி புரிவதைக் காணலாம். ராணுவ நிர்வாகத்தை கோதபாய நடத்துகிறார். தமக்குச் சாதகமான அரசியல்வாதிகளுடனான நிர்வாகத்தை மகிந்த மேற்கொள்கிறார். இரண்டுக்குமிடையிலான தனிவழி நிர்வாகத்தை பஸில் ஏற்படுத்தியுள்ளார்.

கொரோனாவால் ஏற்பட்ட நெருக்கடி, ஏற்றுமதி - இறக்குமதி - உள்ளூர் உற்பத்திகளில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள், பஞ்சம் ஏற்படாது எனக்கூறப்படினும் மக்களை பட்டினிச் சாவுக்குத் தள்ளும் பொருளாதார ரீதியான துர்பாக்கியம் ஒருபுறம்.

சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் - இவர்களின் நட்பு நாடுகளும் தற்போதைய நிலைமையை சாதகமாக்கி நாட்டைத் துண்டுபோடும் அவலம் மறுபுறம்.

இவைகளுக்கு அப்பால் கோதபாயவின் அமெரிக்க பயணத்துக்குப் பின்னர் - அதனிலும் முக்கியமாக இந்திய தரப்பினரின் அடுத்தடுத்த விஜயங்களின் பின்னரான சில அறிவிப்புகளும் முன்னெடுப்புகளுமே அரசியல் சுனாமியாகப் பார்க்கப்படுபவை.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், வெளியுறவுச் செயலாளர் ஹர்ஸவர்தன் ஸ்ரிங்லா ஆகியோரின் பயணத்தைத் தொடர்ந்து, இந்தியாவின் ராணுவத் தளபதி மனோஜ் நரவானேயும், ராஜ்ய சபா உறுப்பினரான பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமியும் தனித்தனி விமானங்களில் இரு தினங்களுக்கு முன்னர் கொழும்புக்கு விஜயம் செய்தமையும் வழமையான பயணங்களாக கருத முடியாதவை.

இவர்களின் பயணங்களுக்கான நோக்கங்கள் பற்றி வெவ்வேறு வகையில் விபரங்கள் வருகின்றன. 13ம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென இலங்கையிடம் தாம் வலியுறுத்தியதாக ஹர்ஸவர்தன் தமிழர் தரப்பிடம் கூறினார். ஆனால் அப்படி எதுவும் கூறப்படவில்லையென வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மறுதலித்துவிட்டார்.

இந்தச் சமகாலத்தில்தான் இலங்கை ராணுவம் உருவாக்கப்பட்டதன் 72வது ஆண்டு நிகழ்வு அநுராதபுரத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கோதபாய பங்கேற்று உரையாற்றினார். இருபது ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றியதையும், பத்து ஆண்டுகள் பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றியதையும் குறிப்பிட்ட இவர், தாம் அங்கம் வகித்த கஜபாகு படையணி அநுராதபுரத்தில் உருவானது என்றும் பெருமையாகக் கூறினார்.

அரசியல்வாதியில்லாத ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாகவும், முப்படைகளின் தளபதியாகவும் பதவி வகிப்பது தாமே என்று திமிருடன் பறைசாற்றிய கோதபாய இரண்டு முக்கிய அரசியல் அறிவிப்புகளை தமது உரையில் வெளியிட்டார். புதிய அரசியலமைப்பு, புதிய தேர்தல் முறைமை என்பவை இவை. சிங்களத்தில் இவர் ஆற்றிய உரையின் ஆங்கில மொழியாக்கம் கொழும்பிலிருந்து வெளிவரும் அரசாங்க பத்திரிகையான டெய்லி நியூஸில் பின்வருமாறு தடித்த எழுத்தில் அமைந்துள்ளது.

''Pesident Gotabaya Rajapaksa assured that action would be taken to amend the constitution and introduce a new electoral system to the people...."  என்றவாறு இது அமைந்தது. இதன் தமிழாக்கம் பின்வருமாறு: 'நான் உறுதியளித்தவாறு புதிய அரசியலமைப்பு ஒன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன். புதிய தேர்தல் முறைமை ஒன்றையும் உருவாக்குவேன்"

கோதபாய தமதுரையில் பயன்படுத்திய சொல்லாடல் மிக மிக முக்கியமானது. புதிய அரசியலமைப்பை வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்றுதான் குறிப்பிட்டாரே தவிர அது உருவாக்கப்படுமென்று கூறவில்லை, உறுதியளிக்கவுமில்லை.

ஆனால், சில தமிழ் ஊடகங்கள் தமது வாசகர்களுக்கு பிழையான அர்த்தத்தில் இதனை வழங்கியுள்ளன. அடுத்த வருடத்தில் புதிய அரசியலமைப்பு உறுதி என்று செய்திக்குத் தலைப்பிட்டால் யாரிடம் நோவது?

புதிய அரசியலமைப்பே நம்பிக்கையில்லாத நிலையில் புதிய தேர்தல் முறைமை எவ்வாறு எங்கிருந்து வரும்? இங்குதான் பஸில் ராஜபக்ச தமது கெட்டித்தனத்தைக் காட்டியுள்ளார். அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறுமென்பது இவரது அறிவிப்பு.

மாகாண சபைகளுக்கு பொறுப்பான அமைச்சர் இத்தேர்தல் சாத்தியமில்லையென்கிறார். மூத்த அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இப்போது தேர்தல் நடைபெறாது என்றும் அதற்கு முன்னர் தேர்தல் திருத்தம் அவசியமெனவும் விளக்கம் அளிக்கிறார். அப்படியானால் மார்ச் மாதத்துக்கு முன்னர் இத்தேர்தல் இடம்பெறுமென பஸில் எதற்காக அறிவிக்க வேண்டும்?

வருகின்ற மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள ஜெனிவாவின் மனித உரிமைப் பேரவையின் 49வது கூட்டத்தொடரில் இதன் ஆணையாளர் இலங்கை தொடர்பான எழுத்துமூல அறிக்கையை வெளியிடுவார். எனவே அந்த மாதம் கண்டம் தாண்ட இந்தத் தேர்தல் அறிவிப்பு இலங்கைக்குத் தேவைப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை வழங்க பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு விதித்த நிபந்தனைக்கும் இலங்கை அரசு மார்ச் மாதம்வரை கால அவகாசம் கேட்டதை நினைவிற் கொண்டால் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளலாம்.

பஸிலின் மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பு சிங்களப் பகுதிகளில் பிரதிபலிப்பு எதனையும் ஏற்படுத்தவில்லை. ஏழு மாகாண சபைகள் சிங்களப் பகுதிகளில் இருந்தபோதிலும் அவர்கள் பஸிலின் அறிவிப்பையிட்டு அலட்டிக் கொள்ளவில்லை. இதன் மீதான நம்பிக்கையீனமே இதற்குக் காரணம். ஆனால், வடக்கிலும் கிழக்கிலும் இது தொடர்பான அதீத நம்பிக்கை ஏற்பட்டு, தமிழ் அரசியல்வாதிகள் ஆகாயத்தில் நடக்க ஆரம்பித்துள்ளனர்.

வடமாகாண சபை முதலமைச்சர் பதவிக்கு கூட்டமைப்பின் வேட்பாளராக தமிழரசுக்  கட்சி தலைவர் மாவை சேனாதிராஜாவே என்று கிளிநொச்சிப் பண்ணையார் சிவஞானம் சிறீதரன் அறிவித்துவிட்டார். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோவும் புளொட்டும் இதனை இதுவரை நிராகரிக்கவில்லை. அநேகமாக இவர்களும் இவரையே ஆதரிப்பர்.

கூட்டமைப்புக்குள் ஒருவர் மட்டும் இதனை விரும்பமாட்டார். இது தெரிந்தே மாவையர் இரண்டு தோழமைக் கட்சிகளுடனும் இணைந்து இயங்கி வந்தார். அண்மையில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை சந்திக்கும் பொழுதும் இதனை வெளிப்படுத்தினார்.

மாகாண சபைக்கு அதிகாரம் உள்ளதோ இல்லையோ முதலமைச்சர் கதிரையில் மாவையருக்கு எப்போதுமே ஆசையுண்டு. கடந்த முறை விக்கியருக்கு விட்டுக் கொடுத்தது போல இம்முறை நிலைமை இல்லை. கடைசிக் காலத்தில் கூட்டமைப்பின் தலைவராக இருக்க வேண்டுமென சம்பந்தன் விரும்புவது போன்று மாவையருக்கும் இந்த ஆசை. கடந்த பொதுத்தேர்தலில் கிடைத்த தோல்வியின் விழுப்புண் இதற்கான காரணம்.

2020 பொதுத்தேர்தலில் சுமந்திரனுடன் இணைந்து கூடிக் குலாவிப் போட்டியிட்டு குறைந்த வாக்குகளில் வெற்றி பெற்ற சிறீதரன் இப்போது மாவையர் பக்கம் திரும்பி அவரை முதலமைச்சராக்க விரும்புவதற்கு ஒரு காரணம் உண்டு. மாவையர் முதலமைச்சரானால் தமிழரசின் தலைவர் பதவி தமக்கே என நம்புகிறார்.

மாவையர் பற்றிய முதலமைச்சர் அறிவிப்பு வெளியான ஓரிரு நாட்களில் சுமந்திரன் தமது அறிவிப்பை வெளியிட்டார். சம்பந்தருக்குப் பின்னர் கூட்டமைப்பின் தலைவராகும் தகுதி தமக்கு உண்டு என்பது இவரது வெட்கம் துறந்த அறிவிப்பு. ஆக, மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னரே மூன்று பதவிகளுக்கு ஆட்கள் அறிவிக்கப்பட்டு விட்டது.

சுமந்திரனின் தலைவர் பதவி அறிவிப்புக்கு ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் சுடச்சுட பதிலளித்துள்ளார். சம்பந்தனுக்குப் பின்னர் (சம்பந்தன் காலமாகும் முன்னரே அரசியல் கிரியைகள் ஆரம்பமாகிவிட்டன) கூட்டமைப்புக்கு கூட்டுத் தலைவர்களே இருப்பார்கள் என்பது இவரது அறிவிப்பு.

வடக்கு மாகாண சபை சட்டரீதியாக இரண்டாகி விட்டது. இதற்கு காணி, காவற்துறை அதிகாரங்கள் எதுவும் கிடையாது என்று அரசாங்கம் அழுத்தம் திருத்தமாக அறிவித்துவிட்டது. முன்னைய வடமாகாண சபை போலவே அதிகாரங்கள் இல்லாதுவிட்டாலும் அது இயங்க வேண்டுமென எல்லோரும் விரும்புகின்றனர்.

இதற்கான முதல் அடியை சுமந்திரன் வைத்துள்ளார். தமது முன்னாள் நண்பரான சிறீதரனின் கிளிநொச்சியிலிருக்கும் கண்டாவளையிலுள்ள வயற்காணியில் அவர் ஏர் பூட்டி நிலத்தை உழுகின்ற படம் பத்திரிகைகளில் வெளியானது.

ஆதரவாகவோ எதிராகவோ என்றென்றும் தாம் ஊடகங்களில் பவனி வரவேண்டுமென்பதில் அக்கறையுடன் செயற்படுபவர் சுமந்த்pரன். வயலுக்குச் செல்லும்போது தம்முடன் படப்பிடிப்பாளரையும் தவறாது கூட்டிச் சென்றுள்ளார். புல் படர்ந்த வயலை உழுவதையும், புல்லுக்குள் விதை நெல்லை விசிறுவதையும் அனுபவமில்லாத விவசாயி என்றவாறு ஊடகங்கள் நையாண்டி செய்துள்ளன. அதுபற்றி அவருக்கு அக்கறையில்லை. எதுவானாலும் தம்மைப்பற்றி ஊடகங்களில் வெளிவந்தால் போதுமென்ற எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க வழிவந்த அரசியல்வாதியல்லவா இவர்.

சாரத்தை மடித்து சண்டிக்கட்டுடன் தலையில் முண்டாசு கட்டி உழவராக சுமந்திரன் காட்சி தரும் படத்தைப் பார்த்தபோது, 1978ல் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன இதே கோலத்தில் காட்சியளித்தது நினைவுக்கு வருகிறது. அவ்வேளை இப்பத்தி எழுத்தாளர் கொழும்பில் ஊடகவியலாளராக பணியாற்றி வந்ததால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது.

1977ல் பதவிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன பண்டைய மன்னர்கள் வழியில் அக்டோபர் மாதத்தில் ஏர்பூட்டு விழாவை (வப்மகுல் என சிங்களத்தில் அழைப்பர்) ஆரம்பிக்க விரும்பினார். 1978ல் முதலாவது ஏர்பூட்டு நிகழ்வு குருநாகல் மாவட்டத்தின் பண்டுவஸ்நுவர என்ற இடத்தில் இடம்பெற்றது. இந்த இடத் தெரிவுக்கு ஒரு காரணம் இருந்தது. இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் களுபண்டா ரத்நாயக்க என்ற வாழ்நாள் விவசாயி. இவர் 1969ம் ஆண்டில் கோவிராஜா (விவசாய மன்னன்) எனப் பட்டமளித்து மதிப்பளிக்கப்பட்டவர்.

இதற்காகவே இவ்விடத்தைத் தெரிவு செய்தார் ஜே.ஆர். அதிகாலை வேளையில் இவர் தலைமையில் ஏறத்தாழ சகல அமைச்சர்களும் இவரது கட்சி எம்.பிக்களும் வயற்காட்டில் வெறுங்காலுடன் சேற்றுக்குள் இறங்கி ஏர்பூட்டி உழுதனர். மடித்துக் கட்டிய வெள்ளைச் சாரம், அரைக்கை வெள்ளை பனியன், தiலைப்பாகையாக வெள்ளை நிறச் சால்வையுடன் எல்லோரும் சேர்ந்து பல ஏக்கர் வயலை உழுத பின்னர் வரம்புக் கட்டில் வரிசையாக அமர்ந்தனர். அனைவருக்கும் தாமரை இலையில் சிங்கள யுவதிகள் பாற்பொங்கல் (கிரிபத்) வழங்கி மகிழ்வித்தனர்.

இந்த நிகழ்வு ஜே.ஆரின் நீண்ட அரசியல் பயணத்துக்கு பயன்பட்டது உண்மை. மங்கலாகத் தெரியும் தமது எதிர்கால அரசியலுக்கு கண்டாவளை வயல் கைகொடுக்கலாமென சுமந்திரன் நினைப்பது தெரிகிறது. அதற்காக புல்லுக்குள் விதைநெல்லை விசிறி, மக்களை மாக்களாக்கக் கூடாது.

அதேசமயம், கிளிநொச்சியின் முடிசூடா மன்னனாக விளங்கும் சிறீதரனின் வாக்குகளை பிரித்தெடுக்கவே அவரது கிளிநொச்சியை சுமந்திரன் தெரிந்தெடுத்தாரா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லையாம்!

No comments