வல்லுறவு முகாம்கள் :சிவி தரப்பு சுட்டிக்காட்டியது!இலங்கை இராணுவத்தால் ‘பாலியல் அடிமைகளாக’ தமிழ்ப் பெண்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ‘வல்லுறவு முகாம்கள்’ பற்றிய விபரங்கள் பற்றி சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான கட்சி தலைவர்கள் ஜநா ஆணையாளரிற்;கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயலணி; ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளித்திருந்த பாலியல் அடிமைகளாக’ தமிழ்ப் பெண்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ‘வல்லுறவு முகாம்கள் பற்றி கவனத்தில் கொள்ளவே கோரப்பட்டுள்ளது.

குழந்தைகள், சிறுவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் காணாமல் போய் உள்ளனர். காணாமல் போன தமது அன்புக்குரியவர்களை தேடி நிற்கும் அவர்களின் குடும்பங்கள், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (ரி.ஐ.டி), குற்றவியல் புலனாய்வுப் பிரிவு (சி.ஐ.டி) மற்றும் ஏனைய அரசாங்க உளவுப் பிரிவுகளால் தொல்லைப்படுத்தப்பட்டும், மிரட்டப்பட்டும், பயமுறுத்தப்பட்டும் வருகின்றனர். 

எவ்வித குற்றச்சாட்டோ அல்லது விசாரணையோ இல்லாமல் அல்லது பாரபட்சமான வழக்கு விசாரணைகளின் பின்னர் குற்றத்தீர்ப்பு வழங்கப்பட்டு பல தமிழ் அரசியல் கைதிகள் வருடக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் தமிழர்களுக்கு எதிராக கொடுமைக் குற்றங்கள் புரிந்ததற்காக, இலங்கைப் பாதுகாப்பு படைகளின் தனி ஒரு உறுப்பினர் கூட கைது செய்யப்படவுமில்லை, குற்றம் சாட்டப்படவுமில்லை. பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் குற்றங்களுக்கான தண்டனைத் தீர்ப்புக்களில் இருந்து அல்லது குற்றச்சாட்டுக்களில் இருந்து இப்போதுள்ள அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கடிதத்தில் சி.வி.விக்கினேஸ்வரன்,செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், க. பிறேமச்சந்திரன் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments