மௌனமும் புரட்சியே:பல்லுப்போன விமல்!



மௌனம்கூட ஒருவித புரட்சிதான். புரிந்துகொள்ளக்கூடியவர்களுக்கு அதன் அர்த்தம் நன்றாகவே புரியும். இரட்டைக்குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்றம் வருவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் தொடர்ந்தும் இருக்கின்றோம்.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இரட்டைக்குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்றம் வருவதற்கு அரசமைப்பின் 19ஆவது திருத்தச்சடடத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் அந்த ஏற்பாடு 20ஆவது திருத்தச்சட்டம் ஊடாக நீக்கப்பட்டது. இதற்கு விமல் வீரவன்ச கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். அரசியலில் மட்டுமல்ல அரச உயர் பதவிகளிலும் இரட்டை குடியுரிமை உடையவர்களுக்கு இடமளிக்ககூடாது எனவும் வலியுறுத்திவந்தார். எனினும் அவரின் கோரிக்கை எடுப்படவில்லை.

எனினும், புதிய அரசமைப்பின் ஊடாக இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் எனக்குறிப்பிட்டு 20 ஐ விமல் ஆதரித்தார். தற்போது பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வந்துள்ளார். சமகாலத்தில் விமல் வீரவன்ச மௌன போக்கை கடைபிடித்துவருகின்றார்.

இந்நிலையில் அவரின் வருகை மற்றும் இரட்டை குடியுரிமை உடைய பஸில் ராஜபக்சவின் நாடாளுமன்ற பிரவேசம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் விமலிடம் கேள்விகளை எழுப்பினர். இவற்றுக்கு அவர் வழங்கில பதில்கள் வருமாறு,“ மௌனமும் ஒருவித குரல்தான். அதில் சிறந்த அர்த்தங்கள் உள்ளன. புரிந்துகொள்ளக்கூடியவர்களுக்கு அதனை தெரிந்துகொள்ளமுடியும். பஸில் ராஜபக்சவோ அல்லது வேறு நபர்களோ நாடாளுமன்றம் வருவதை நாம் எதிர்க்கவில்லை. 20ஆவது திருத்தச்சட்டத்தின்போது இரட்டை குடியுரிமை தொடர்பான பிரச்சினையும் தீர்க்கப்படவேண்டும் என வலியுறுத்தினோம். அந்த நிலைப்பாட்டிலேயே நாம் இன்றும் இருக்கின்றோம்.


பஸில் ராஜபக்சவும் எமது அரசின் பங்காளி. அரசின் பங்காளியாகவுள்ளவர்களுக்கு உரிய பதவியை வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அந்த உரிமையை எம்மால் நிராகரிக்க முடியாது. பொருளாதார மட்டத்திலான சவால்களை வெற்றிக்கொள்ளமுடியுமென்றால் அது மிக முக்கியம். “ – என்றார்.

No comments