மிலேனியம் சவால்கள் உடன்படிக்கையில் தொடர்ந்தும் இலங்கை இணைப்பு!


மிலேனியம் சவால்கள் உடன்படிக்கையில் தொடர்ந்தும் இலங்கை இணைக்கப்பட்டுள்ளது என அமெரிக்கத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

வொஷிங்டனில் நாளை 15ஆம் திகதி மிலேனியம் சவால்கள் உடன்படிக்கை தொடர்பான கூட்டம் இடம்பெறவுள்ளது என அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தை வழங்கும் பட்டியலில் இலங்கை உள்ளது. எவ்வாறாயினும் கூட்டத்தில் எட்டப்படும் முடிவுகள் தொடர்பில் முன்பு ஊகிக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

பல்வேறுபட்ட சர்ச்சைகளுக்கு மத்தியில் எம்.சி.சி. மானியப் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது என முன்னர் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிக்கல, இலங்கை இந்தத் திட்டத்திலிருந்து நீக்கப்படவில்லை என்பதனை உறுதிப்படுத்தினார்.

பொருளாதார வளர்ச்சி மூலம் வறுமையைக் குறைக்கும் நோக்கில் 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்கும் இந்த ஒப்பந்தத்துக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எம்.சி.சி.குழு ஒப்புதல் அளித்தது.

இருப்பினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் மிலேனியம் சவால்கள் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதை 2019ஆம் ஆண்டு டிசெம்பரில் நிறுத்தி, எம்.சி.சியை மீளாய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழு பிரதமரால் நியமிக்கப்பட்டது.

அதன்படி இந்தக் குழு தனது மீளாய்வு அறிக்கையை இந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மற்றும் ஜனாதிபதியிடம் ஒப்படைத்தது. இதனையடுத்து இந்த அறிக்கை பின்னர் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதேவேளை கடந்த ஒக்ரோபர் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, இலங்கையின் இறையாண்மையைப் பாதிக்கும் வகையில் மோசமான ஒப்பந்தங்களை எட்டப்போவதில்லை எனக் கூறியிருந்தார்.

No comments