வன்னி அபாய வலயமாகின்றது:சடலமும் மீட்பு?



வன்னி பகுதியில் அடை மழை தொடர்கின்ற நிலையில் கனகாம்பிகைக்குளம் வான்பாய்வதால் அதிக நீர் தற்போது வெளியேறுகிறது. தாழ்நில பகுதியில் உள்ளோர் மிகுந்த அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இதனிடையே இரணைமடு நீர்த்தேக்க மட்டம் 29அடியினை அண்மித்துக்கொண்டிருக்கின்றது.

இதனிடையே வவுனியா புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்கு சென்ற மாணவன் ஒருவன் வெள்ளிக்கிழமை மாலை நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

அண்மையில் வவுனியாவில் பெய்த கனமழையின் காரணமாக வவுனியா புதுக்குளத்தில் அமைந்துள்ள நீர்தேக்கம் நிரம்பியதுடன் மேலதிக நீர் சுருங்கை வழியாக வெளியேறி வருகின்றது.

இதனை பார்வையிடுவதற்காக அதிகமான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் குறித்த நீர்தேக்கத்திற்கு தினமும் சென்ற வண்ணமிருந்தனர்.

இந்நிலையில் நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்காக தி.தனுசன் (வயது 18) என்ற மாணவன் தனது நண்பர்களுடன் வெள்ளிக்கிழமை மதியம் அங்கு சென்றிருந்தார்.

இதன்போது நீர் வழிந்தோடும் பகுதியில் அவர் இறங்கிய நிலையில் நீரில் தவறி வீழ்ந்து மூழ்கியுள்ளார்.

இதனை அவதானித்த அவரது நண்பர்கள் நீருனுள் இறங்கி மாணவனை நீண்ட நேரம் தேடியும் கண்டறிய முடியவில்லை.

இன்றைய தினம் (06.12) காலை மீண்டும் இளைஞர்கள் நீர் ஒடும் பகுதியில் தேடுதல் நடத்திய போது கல் ஒன்றில் அகப்பட்டு இருந்த நிலையில் குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாணவன் சடலமாக மீட்கப்பட்டதனையடுத்து குளத்தினை வேடிக்கை பார்க்க வருவதற்கு பொதுமக்களிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


No comments