அவர்களுக்கு பௌத்த விகாரைகள்! இவர்களுக்கு முள்ளிவாய்க்கால் - பனங்காட்டான்

சிங்கள் பௌத்த ராணுவ ராஜபக்ச குடும்ப ஆட்சி ஆரம்பமாகிவிட்டது. இனி எல்லாமே அந்தக் குடும்பத்தின் ஐந்து அமைச்சர்களும், பன்னிரண்டுக்கும் அதிகமான அவர்களின் அமைச்சுகளும் ராணுவமும் எடுக்கும் முடிவுதான். இந்த வகையில், சிங்கள தேசம் தங்கள் பதவியேற்புக்கு பௌத்த வழிபாட்டுத் தலங்களை தெரிந்தெடுக்கலாமென்றால் தமிழ்த் தேசியத்தை ஆழமாக நேசிக்கும் விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் தங்கள் உறுதிமொழிக்கு முள்ளிவாய்க்காலை தெரிந்தெடுத்ததில் என்ன தவறு?

முன்னர் சிலோன் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட்ட இலங்கையின் டொமினிக்கன் அரசமைப்பிலான முதலாவது பொதுத்தேர்தல் 1948ம் ஆண்டு நடைபெற்றது. 

1970ம் ஆண்டு இடம்பெற்ற ஏழாவது பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற சிறிமாவோ பண்டாரநாயக்க, இடதுசாரிகளின் துணையுடன் தனிச்சிங்கள நாட்டுக்கான சிறிலங்கா எனப்பெயர் கொண்ட ஜனநாயக சோசலிச குடியரசை 1972ல் உருவாக்கினார். 

1977ல் முதன்முதலாக பிரதமரான ஜே.ஆர்.ஜெயவர்த்தன சிங்கள பௌத்த இராச்சியத்துடன் தமது ஐக்கிய தேசிய கட்சியை முன்னிலைப்படுத்தும் இலக்குடன், புதிய அரசியலமைப்பை பிரகடனம் செய்து பதினான்கு ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி புரிந்தார். 

இந்த இரண்டு குடியரசு அரசியல் அமைப்புகளும் இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழரின் பங்கேற்பின்றி நிறைவேற்றப்பட்டவை. 1948 முதல் 1970 வரை ஏழு பொதுத்தேர்தல்கள் இடம்பெற்றன. இலங்கை ஜனநாயக குடியரசான பின்னர் இதுவரை ஒன்பது தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன. ஆக, இதுவரை ஏழு தசாப்தங்களில் பதினாறு பொதுத்தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன. 

இந்த ஜனநாயக(?) தேர்தல்களில் உருவான சிங்கள அரசாங்கங்கள் தங்கள் மக்களின் உரிமைகள், சுதந்திரங்களை மையப்படுத்தி தயாரித்த அரசியல் அமைப்புச் சட்டங்களே, இந்நாட்டை தாயகமாகக் கொண்ட தமிழர்களைத் தனிநாடு கோரும் நிலைக்குத் தள்ளின என்பதை இப்பத்தியின் முகவுரையாகக் குறிப்பிட வேண்டும். 

இப்போது மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி பீடமேறியிருக்கும் ராஜபக்ச குடும்பம் ராணுவ பங்கேற்புடன் புதிய அரசியலமைப்பை உருவாக்கப் போவதாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவோடு நல்லாட்சி அரசால் கொண்டுவரப்பட்ட 19வது திருத்தச் சட்டத்தை அதற்கு முன்னர் நீக்கப்போவதாகவும் அறிவித்துள்ளது. 

நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு இம்மாதம் 20ம் திகதி ஆரம்பமானபோது கொள்கை விளக்க உரை நிகழ்த்திய கோதபாய ராஜபக்ச இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 

புராதன பௌத்த உரிமைகளைக் காப்பாற்ற முழு நடவடிக்கை எடுக்கப்படுமென்று தமதுரையில் தெரிவித்த இவர், மற்றைய மதங்களின் உரிமை, பாதுகாப்புப் பற்றி எதுவுமே குறிப்பிடாததைக் கொண்டு, பௌத்த ஆட்சியே தங்கள் ஆட்சி என்பதை மறைக்காது கூறியுள்ளார் என்பது புலனாகிறது. 

நாட்டில் தற்போது யானைகளின் தொல்லை அதிகமாக இருப்பதால் அதனை நீக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கோதபாய இவ்வுரையில் குறிப்பிட்டதை, ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியையும், அவரோடு இணைந்தவர்களையும் மனதில் கொண்டு இரட்டை அர்த்தத்தில் கூறியதாக நோக்கலாம். 

இதுதான் உண்மையென்றால், வருங்காலத்தில் ஒரு கட்சிதான் இருக்கும், அது தங்களால் உருவாக்கப்படும் ராணுவ ஆட்சியாகத்தான் இருக்கும், அதன் உருத்துக்காரர்கள் ராஜபக்ச குடும்பத்தினராகவே இருக்கும், மகிந்த அண்மையில் கூறியதுபோல அடுத்த இருபது ஆண்டுகளுக்கு ஆட்சிமாற்றம் கிடையாது என்பதை கோதபாய மறைபொருளில் கூறியுள்ளாரென கொள்ள இடமுண்டு. 

அண்ணன்மார் இருவர், அவர்களின் தம்பி, அண்ணன்மாரின் பிள்ளைகள் இருவர் என அந்தக் குடும்பத்தின் ஐவர் (பஞ்சர்) ராஜபக்ச ஆட்சியில் அமைச்சர்களாகியிருப்பதை கின்னஸ் சாதனையாக மட்டுமன்றி மகிந்த கூறியதன் அர்த்தமாகவும் பார்க்கின், தமிழரைவிட சிங்களத் தரப்பினரே இதனை ஆழமாகச் சிந்திக்க வேண்டிய காலம் இன்றையது. 

தமிழ் மக்களைப் பொறுத்தளவில் 72 ஆண்டுகளாக சிங்கள ஆட்சியை மட்டுமன்றி ராணுவ கொடூரங்களையும் அனுபவித்து - இதுதான் இலங்கையின் அரசாட்சி என்பதை நித்தம் நித்தம் அனுபவித்து உணர்ந்து வருபவர்கள். இந்த அனுபவம் சிங்களவருக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை. அப்படியான ஒரு நிலை ஏற்படுமானால் அவர்களால் அதனை தாங்கிக்கொள்ள முடியாது போகும். 

1956இலிருந்து முள்ளிவாய்க்கால்வரை இன ஒதுக்கல், இனப்பாகுபாடு, இனரீதியான தாக்குதல், இனவழிப்பு, இனச்சுத்திகரிப்பு என்பதை சகல சிங்கள ஆட்சியினர் காலத்திலும் அனுபவித்தவர்கள் - இன்றும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் தமிழர்கள். 

இதில் அரச ஏவல் படைகளான ராணுவத்தின் வகிபாகமே மூலமானதும் முக்கியமானதும். இதற்காகத்தான் சிறிலங்கா ராணுவத்தை சிங்களத் தரப்பினால் முழுமையாக நிரப்பி வைத்துள்ளனர். இவ்விடயத்தில் ஐக்கிய தேசிய கட்சி, சிறிலங்கா சுதந்திர கட்சி என்பவற்றுள் வித்தியாசம் இல்லை. மகிந்தவின் பொதுஜன பெரமுன திட்டமிட்டு படையினரை அரச நிர்வாக இயந்திரத்துள் இணைக்க ஆரம்பித்துள்ளது. 

தமிழர் தாயகத்தினை நில ஆக்கிரமிப்புச் செய்துள்ள ராணுவம், இப்போது அப்பிரதேசத்தின் நிர்வாக அலகாக மாறியுள்ளது. சிங்கள மயமாக்கப்பட்ட இந்த மண்ணை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் கோதபாய - மகிந்த ஆசிர்வாதத்தில் ஆரம்பமாகியுள்ளது. 

இந்தப் பின்புலத்தில், இந்த மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலின் முடிவை உட்சென்று பார்க்க வேண்டியது அவசியம். மகிந்த தலைமையிலான பொதுஜன பெரமுனவுக்கு தேர்தல் மூலம் (தேசியப்பட்டியல் உட்பட) 145 ஆசனங்கள் கிடைத்தன. 

தமிழர் தாயகத்தில் டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் ராமநாதன், குலசிங்கம் திலீபன், சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஆகியோர் பொதுஜன பெரமுனவில் போட்டியிடாது, அதன் தோழமைக் கட்சிகளாக தேர்தலில் நின்று பெற்ற வெற்றியே மகிந்த அணிக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற உதவியுள்ளது. 

பொதுஜன பெரமுன தனித்து 150 ஆசனங்களைப் பெறாததால், எண்ணிக்கையை மூன்றிலிரண்டு பெரும்பான்மையாக்க வடக்கு கிழக்கில் வெற்றிபெற்ற மேற்குறிப்பிட்ட நால்வரையும் இணைத்தே  பலம் சேர்த்தது என்ற உண்மை சாதுரியமாக மறைக்கப்பட்டு, அவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டதோடு மூழ்கடிக்கப்பட்டுவிட்டது. 

தமிழ் தேசிய கூட்டமைப்பு இரண்டாயிரத்தில் உருவாக்கப்பட்டபோது அதில் இடம்பெற்ற நான்கு கட்சிகளில் இரண்டு வெளியேறிய பின்னர், கடந்த பத்தாண்டுகளாக தாங்களே தமிழர்களின் ஏகத்தலைவர்கள் என்று கூறி, சிங்களத் தரப்புக்குள் இணக்க அரசியல் செய்யப்போய் எதிர்பார்த்த தோல்வியை இந்தத் தேர்தலில் சந்தித்தது. 

இருபது ஆசனங்கள் தங்களுக்குக் கிடைக்குமென்று சவால் விட்டுவந்த கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தமது திருமலைத் தொகுதியில் முன்னைய தேர்தலிலும் பார்க்க குறைந்த வாக்குகளுடன் தப்பிப் பிழைத்துள்ளார். 

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் ஏழு தொகுதிகளையும் கூட்டமைப்பே கைப்பற்றுமென்று அறைகூவிய சரவணபவன் தோல்வி கண்டார். கூட்டமைப்பு முன்னைய ஐந்தில் இரண்டு இடங்களை இழந்தது. 

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் செல்லுபடியான வாக்குகள் 3,59,130. இதில் கூட்டமைப்புக்கு 1,12,967 மட்டுமே (3 ஆசனங்கள்) கிடைத்தன. மிகுதி நான்கு ஆசனங்களையும் பெற்ற மற்றைய கட்சியினர்களுக்கு 2,46,163 வாக்குகள் போயிற்று. ஏறத்தாழ மூன்றிலிரண்டுக்கும் அதிகமான யாழ். மாவட்ட மக்கள் தமிழரசை ஏன் நிராகரித்தனர்? அவர்கள்தான் பதில் கூறவேண்டும். 

உட்கட்சி மோதல், தன்னிச்சையான அதிகாரப்போக்கு, தலைமையின் மழுப்பல், பேச்சாளரின் தவளைக் கூச்சல் என்பவையே காரணமென தமிழரசார் மட்டுமன்றி, பங்காளிகளான ரெலோ மற்றும் புளொட் தலைவர்களும் பகிரங்கமாகக் கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியிலிருந்து சுமந்திரனை நீக்க வேண்டுமென வீட்டுக்குள்ளிருந்தே குரல்கள் எழும்பியுள்ளன. இல்லையேல், தமிழரசுக்கென தனியான பேச்சாளர் தேவையென கேட்கப்படுகிறது. சம்பந்தன் கண்களை மூடியவாறு சமாதி நிலையில் காளியம்மனை உச்சாடனம் செய்தவாறு கூறப்போகும் முடிவு என்னவென்பதை அறிய விரக்தியிலுள்ள மக்கள் காத்திருக்கின்றனர். 

நாடாளுமன்ற முதல் நாள் அமர்வில் விக்னேஸ்வரனும், கஜேந்திரகுமாரும் ஆற்றிய உரைகள் ஒன்றையொன்று முன்மொழிந்து வழிமொழிவதுபோல அமைந்துள்ளது. 

இலங்கையில் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உள்ளதென்று அழுத்திக் கூறிய விக்னேஸ்வரன், ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்பதை சிங்களத்தில் இரு தடவை தெரிவித்ததில் நிறைய அர்த்தமுண்டு. 

கஜேந்திரகுமார் தமது உரையில், முன்னெப்போதுமில்லாதவாறு ஒருமுனைப்படுத்தப்பட்ட அங்கத்தவர்களுடனான பாராளுமன்றத்தில் மக்களின் (தமிழர்) ஜனநாயக ஆணையிலான கலந்துரையாடலுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டுமென சபாநாயகரிடம் வேண்டியுள்ளார். நல்லாட்சிக் காலத்தில் பொல்லுகளும், தண்ணீர்ப் போத்தல்களும் நாடாளுமன்ற வளாகத்துள் பறந்தது போன்ற நிலைமை தமிழர் ஆணை மீதான உரைகளின்போது இடம்பெறக்கூடாதென்பதை இவர் பூடகமாக எடுத்துக் கூறியுள்ளார். 

இறுதியாக, விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் நாடாளுமன்றம் செல்வதற்கு முன்னர் முள்ளிவாய்க்கால் சென்று உறுதிமொழி எடுத்த விடயம் தொடர்பாக குறிப்பிட்டேயாக வேண்டும்.

அனுராதபுரம் ராஜமகா விகாரையில் கோதபாய - மகிந்த சகோதரர்கள், கண்டி தலதா மாளிகையில் அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம் செய்தது தொடர்பாக எவருமே வாய் திறக்கவேயில்லை. 

ஆனால், விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் முள்ளிவாய்க்காலில் உறுதிமொழி எடுத்தது தமிழர் தரப்பில் சிலருக்கு மட்டும் ஏனோ வயிற்றை வலிக்கிறது. கடுமையாக கொதித்துப் போனார்கள். 

அந்தப் புனித மண்ணை அசுத்தப்படுத்த வேண்டாமென்ற பாணியில் கருத்து வெளியிட்டு பத்திரிகைகளில் படத்தோடு செய்தியிட்டு மகிழ்ந்து கொண்டனர். ஆனால் சிங்களத் தரப்பிலிருந்து  இதுவரை எவரும் முள்ளிவாய்க்கால் உறுதிமொழிக்கு எதிர்ப்புக் கூறவில்லை.  

சிங்களவருக்கு பௌத்த வழிபாட்டுத் தலங்களே சத்தியப்பிரமாணத்துக்குப் பொருத்தமான இடங்களென்றால், தமிழர் உதிரத்தாலும் மாவீரத் தியாகத்தாலும் உரமேறிய சிவந்த மண்ணான முள்ளிவாய்க்காலை தமிழ்த் தேசியத்தை நேசிப்பவர்கள் தங்கள் உறுதிமொழிக்கான இடமாக தெரிந்தெடுத்ததில் என்ன தவறு? எதற்காக சிலர் கொதிக்க வேண்டும்?

No comments