மாமனிதர்:எங்களிற்கான அங்கீகாரம்-சசிகலா!


இந்த ஆட்சியின் கீழ் தமிழ் மக்களிற்கு எதுவுமே கிடைக்குமென நான் நம்பவில்லை.நல்லாட்சியென  சொல்லப்பட்ட முன்னைய ஆட்சியில் தான் எனது கணவரது படுகொலை வழக்கு மூடி வைக்கப்பட்டதென தெரிவித்துள்ளார் மாமனிதர் ரவிராஜின் மனைவியார் சசிகலா ரவிராஜ்.


யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை முதன்முதலாக அவர் ஊடகவியலாளர்களை சந்தித்திருந்தார்.

எனது கணவருக்கு மரணத்தின் பின்னராக வழங்கப்பட்ட மாமனிதர் கௌரவத்தை சாவகச்சேரியில் நிறுவப்பட்ட தூபியில் நீக்கியது எனக்கு உடன்பாடனதல்ல.இது தொடர்பில் மேலதிகமாக நான் தற்போது பேசவிரும்பவில்லையெனவும் ஊடகவியலாளரது கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் அவர் கருத்து  தெரிவித்தார்.

வடக்கிலுள்ள 87ஆயிரம் விதவைகள் சார்பில் நான் அரசியலுக்கு வந்துள்ளேன்.

கடந்த பத்துவருடங்களிலும் மாறி மாறி கதிரையிலிருந்த எந்தவொரு அரசும் அவர்கள் தொடர்பில் எதனையும் செய்யவில்லை. 

நான் மக்கள் பிரதிநிதியாக தெரிவானதும் அரசினது உதவிகளை மட்டும் நம்பியிருக்காது புலம்பெயர் உறவுகள் மற்றும் சர்வதேச உதவிகள் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவேன்.

குடும்ப தலைவரை இழந்த குடும்பமொன்றின் வலி என்னவென்பதை நானும் எனது இரு பிள்ளைகளும் நன்கு அறிவோம்.

குறிப்பாக இளம் சமுதாயத்தை மீட்டெடுக்க யுத்த அவலங்களுடன் வாழும் விவசாயிகள் மற்றும் மீனவர்களது வாழ்வியலை கட்டியெழுப்ப என்னால் முடியுமெனவும் அதற்காக பாடுபடுவேன் எனவும் அவர் தெரிவித்தார்.

தனது முதன்மை பணியாக விதவைகள் தொடர்பிலான தரவு தளத்தை உருவாக்கவுள்ளதாக தெரிவித்த அவர் அனைவரது ஒத்துழைப்பினையும் பெற்று அதனை நிறைவேற்றுவோமெனவும் தெரிவித்தார்.

தனது கணவரது பாதையில் பயணிக்க போவதாக தெரிவித்த அவர் தனது கணவரை நேசிக்கும் யாழ்ப்பாண மக்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் கூட்டமைப்பிற்கு அளிக்கின்ற வாக்கில் ஒன்றை தனக்களிப்பார்கள் என உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்தார். 

No comments