மகிந்தவிற்கு வகுப்பெடுத்த சி.வி?
தனிநாட்டு சிந்தனையில் இருந்து தமிழர்கள் விடுபட வேண்டும் என்றும் நாட்டு மக்களுக்கு பல திட்டங்கள் மூலம் வளர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழ் மக்களுக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் இடையில் இருக்கும் பிரச்சனைகள் வேறு வேறு என்றும் பிரதமர் மகிந்த இராஜபக்ச அண்மையில் இந்திய தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளாரே. அத்துடன் வடக்கு கிழக்கு பகுதிகளை தனிநாடாக்க வேண்டும் என்பது நடைமுறைச் சாத்தியமான கோரிக்கை அல்ல என்றும் கூறியுள்ளார். அவை பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில் – அவர் கூறியவற்றை ஒவ்வொன்றாக எடுத்து பதில் தருகின்றேன்.
i. தனிநாட்டுச் சிந்தனையில் இருந்து தமிழர்கள் விடுபட வேண்டும்.
அன்பார்ந்த பிரதமருக்கு பல விடயங்கள் தெரியவில்லை அல்லது மறந்துவிட்டார் போல் தெரிகின்றது.
இப்பொழுதும் வடக்கு கிழக்கு தனிப்பட்ட பிரதேசமே. அங்கு பெரும்பான்மையர் தமிழ் மொழி பேசுவோர். இவர்கள் வாழையடி வாழையாகத் தொடர்ந்து 3000 வருடங்களுக்கு மேலாக வடக்கு கிழக்குப் பிரதேசத்திலும் அவற்றைச் சார்ந்துமே வாழ்ந்து வருகின்றார்கள். அங்கு தற்போது வாழும் பெரும்பான்மையினர் பௌத்தர்கள் அல்ல் அவர்கள் இந்து மக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் கிறீஸ்தவர்களே. அவர்களின் இடங்கள் உலர்ந்த வலயத்திற்கு உட்பட்டன . மற்றைய ஏழு மாகாணங்களும் ஈர வலயத்திற்கு உட்பட்டன . வடகிழக்கு மக்களுக்கென்று பிறிதான மொழி, கலை, கலாச்சாரம், பாரம்பரிய கைத்தொழில்கள் உள்ளன.
வடக்கு நோக்கிப் பயணிக்கும் இரயில்களில் மதவாச்சி தாண்டியவுடன் அதில் பயணிக்கும் தமிழ் மக்கள் காலை நீட்டி கையை நீட்டி சந்தோ~மாகத் தமிழ் மொழியில் பேசி வருவதை அவர் அறியமாட்டார் என்று கூறமுடியாது. படையினர் இரயிலினுள் பெருவாரியாகப் பயணஞ் செய்தால் அல்லாது தமிழ்ப்பேசும் மக்கள் வேற்று இடத்தில் இருந்து வந்து தமக்குரிய பிரதேசத்தினுள் நுழைந்து விட்டோம் என்று மகிழ்வடைவதை நான் பலமுறை கண்டிருக்கின்றேன். 1958லும் 1983லும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை கப்பல்களில் அனுப்பியது வட கிழக்கிற்கே. அது தமிழர் வாழ் இடங்கள் என்ற படியாலே தான் அவ்வாறு அனுப்பினார்கள். எமது வடக்கு கிழக்கு பேசு மொழி தமிழே; சிங்களம் அல்ல. எந்தக் காலத்திலும் வடக்கு கிழக்கில் பெருவாரியாக சிங்களவர்கள் வாழ்ந்ததில்லை. தமிழர்கள் அனுராதபுரத்திலும் பொலநறுவையிலும் அண்மைக்காலம் வரை வாழ்ந்து வந்துள்ளார்கள். நான் சிறுவயதில் அனுராதபுரத்தில் இருந்த போது பல தொழில் ஸ்தாபனங்கள் தமிழர்களுக்குரியதாக இருந்தன. 17 வருடங்களாக ஒரு தமிழரே நகரசபை முதல்வராக இருந்தார். ளுறுசுனு பண்டாரநாயக்க காலத்தில் பழைய நகரம் வேண்டுமென்றே கைவிடப்பட்டு புதியதொரு நகரம் அங்கு கட்டப்பட்டு தமிழர்கள் பழைய நகரத்தில் இருந்து விரட்டப்பட்டு சிங்களவர்கள் பெருவாரியாக அனுராதபுரத்தில் தற்போது வாழ்கின்றார்கள்.
இதை நான் கூறுவதன் காரணம் வடக்கு கிழக்கில் சிங்களவர்கள் எந்தக் காலத்திலும் பெருவாரியாக வாழவில்லை. மாறாகத் தமிழ் மக்கள் அண்மைக்காலம் வரையில் தற்போதைய சிங்களப் பிரதேசங்களில் வாழ்ந்து வந்துள்ளார்கள் என்பதை எடுத்துக் காட்டவே. எனினும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தற்போதும் பெரும்பான்மை தமிழ் மக்களே வாழ்ந்து வருகின்றனர். ஆகவே தற்போது தனி நாடாக இருக்கும் வடக்கு கிழக்கைத் தமது பிரத்தியேகப் பிரதேசம் என்று தமிழ்ப் பேசும் மக்கள் எண்ணுவதில் என்ன தவறு? 1987ல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கூட வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரியத் தாயகப் பிரதேசம் என்று கூறப்பட்டது. இந்த உண்மையை இலங்கை அரசாங்கம் ஏற்றே கையெழுத்திட்டது. 18 வருடங்கள் வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டே இருந்து வந்தன. பின் எப்படி மாண்புமிகு பிரதம மந்திரி தனிநாட்டுச் சிந்தனையில் இருந்து தமிழ் மக்கள் விடுபட வேண்டும் என்று கூறலாம்? உண்மையில் சிங்கள மக்கள் வடக்கு கிழக்கு சேர்ந்த ஸ்ரீலங்காவை சிங்கள பௌத்த நாடாக கருதுவது தான் தவறு என்று நான் கூறுகின்றேன்.
இலங்கை பூராகவும் ஒரு பௌத்த நாடு, அது ஒரு தனிச் சிங்கள நாடு என்ற சிந்தனையில் இருந்து மாண்புமிகு மகிந்தர் விடுபடவேண்டும்.
இலங்கையில் இரு வேறு மக்கட் குழுவினர் வேறு வேறு மொழி பேசி, வேறு வேறு கலாச்சாரத்தைக் கடைப்பிடித்து, வேறு வேறு மதங்களைக் கடைப்பிடித்து, அடையாளப்படுத்தக் கூடிய நிலப்பரப்பில், பல நூற்றாண்டு காலம் வாழ்ந்து வருவதால் இந்த நாட்டில் இரு வேறு தேசத்தவர்கள் (ஊவைணைநளெ ழக னகைகநசநவெ யேவழைளெ) இருந்து வருகின்றனர் என்பதே உண்மை. தமிழர்கள் தனிநாடு கோரவில்லை. தம்மைத் தாமே ஒரே நாட்டினுள் ஆள விட வேண்டும் என்றே கோருகின்றார்கள். அவர்கள் வாழ்க்கையில் சிங்கள அரசியல்வாதிகள் உள்நுழைவதை அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் சிங்களப் பொது மக்களுடன் எந்தவித கோப தாபம் அற்றவர்கள்.
ii. நாட்டு மக்கள் கேட்டது பொருளாதாரத் திட்டங்களையே.
எமது மக்கள் பொருளாதார அபிவிருத்தியை எதிர்நோக்கி அங்கலாய்க்கின்றார்கள் என்பது உண்மையே. ஆனால் பிரதமர் தமது செவ்வியில் குறிப்பிட்டிருக்கும் ஒரு விடயத்தை யாம் மனதில் நிலைநிறுத்த வேண்டும். முன்பு அவர்களுக்கு (தமிழ் மக்களுக்கு) மறுக்கப்பட்டிருந்த வாய்ப்புக்களைப், பல திட்டங்கள் மற்றும் வளர்ச்சியின் மூலம் ஏற்படுத்தித்தர வேண்டும் என்பது தமது விருப்பம் என்று கூறியுள்ளார். அதாவது அவருக்கு முன்னர் ஆட்சியில் இருந்த சிங்கள அரசியல்வாதிகள் தமிழர்களுக்கு பொருளாதார அபிவிருத்தியை மறுத்ததாக ஏற்றுக் கொள்கின்றார். 2015 வரையில் அவரின் ஆட்சி இருந்ததே. அப்போது அவர் தமிழர்களுக்காக இயற்றிய செயற்றிட்டங்கள் என்ன? ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்புக்கள் என்ன? ஏற்படுத்திய வளர்ச்சி என்ன? அன்று ஏற்படுத்தாத பொருளாதார வளர்ச்சியை இனித்தான் ஏற்படுத்திக் கொடுக்கப் போகின்றாரா? மனம் இருந்திருந்தால் 2009 போர் முடிந்தவுடன் தமிழ் மக்களுக்காக பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கலாம். எமது சிறைக்கைதிகளை விடுவித்திருக்கலாம். அவ்வாறு செய்யாமல் அவர் 2020ல் இவ்வாறு கூறுவது நகைப்புக்கு இடமாக இருக்கின்றது.
அவர் போலவே 2015இல் வந்த சிங்கள அரசியல்வாதிகளும் எமக்காக வெட்டிப் பிடுங்கப் போவதாக அறிவித்தார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை. யானைகளுக்கான வேலி கட்ட ஜனாதிபதி எல்லோர் முன்னிலையிலும் அரசாங்கம் தருவதாக உறுதிமொழி அளித்த ஒரு சிறு உதவியைக் கூடக் காலம் கடத்தி தராமல் விட்டிருந்தார். வடமாகாணசபையானது செயலுருவாக்கப் பாடுபட்ட ஏற்றுமதிக்கான மரக்கறி, பழங்கள் பயிரிடும் வன்னிப் பிரதேச திட்டமானது எல்லா விதமான அறிக்கைகள் பெறப்பட்டும் கொழும்பில் இருக்கும் காணி ஆணையாளர் நாயகத்தினால் மறுக்கப்பட்டது. நாம் வழங்கிய 200 ஏக்கர் காணியில் வனப் பிரதேசங்களும் அடங்கியிருந்தன என்று பொய் கூறியே இவ்வாறான மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் இராஜபக்ச எப்பொழுது வேண்டுமானாலும் பொருளாதார அபிவிருத்தியை வட கிழக்கில் ஏற்படுத்தலாம். ஆனால் அதுவல்ல அவருக்குத் தேவையானது. தமிழ் மக்கள் தமது சட்டப்படியான, நியாயமான, யதார்த்தமான அரசியல் கோரிக்கைகளைக் கைவிட்டால் தாம் பொருளாதார அபிவிருத்தியை தருவார் என்று தான் கூறுகின்றார். உரிமைகளைக் கைவிடு. ஊட்டங்களை நாம் தருவோம் என்பது தான் அவரின் பேச்சின் பொழிப்பாகும்.
நான் முதலமைச்சராக இருந்த காலத்தில் ஒரு வெளிநாட்டு ஸ்தானிகரிடம் மூன்று பொருளாதார திட்டங்களை முன்வைத்து அதற்கு உதவிபுரிய முடியுமா என்று கேட்டேன். ஏன் முடியாது என்று கூறி எமது திட்ட வரைவுகளைத் தமது நாட்டின் தலைநகரத்திற்கு அனுப்பிவிட்டதாகக் கூறி தாமதித்து வந்தார். கடைசியில் அவர் பச்சைக் கொடி காட்டவில்லை. காரணமும் கூறப்படவில்லை. அவர் நாட்டுத் தலைநகரத்தில் தாமதம் என்று மட்டுமே கூறப்பட்டது. ஆனால் நான் ஸ்தானிகரின் கனி~;ட அலுவலர்களிடம் இருந்து அறிந்து கொண்டது இலங்கை அரசாங்கமே அவற்றை விரும்பவில்லை என்பதை.
நான் கேட்ட திட்டங்கள் யாவையெனில் – வடமாகாண குளங்களின் அடித்தளத் தூர்வும் புனருத்தாரணமும், வடமாகாண கிராம அபிவிருத்தி சங்கக் கட்டிடங்களைப் புனரமைத்தலும் அவற்றை நவீனமயமாக்கலும் மற்றும் வடக்கு கிழக்கை கடலோரமாக முல்லைத்தீவினூடாக இணைக்கும் பாதை அமைத்தல் ஆகியன. ஆகவே எந்தச் சிங்கள அரசியல்வாதியும் தமிழர்களை அடிமைப்படுத்தி வைக்கவும், தம்மை அண்டித் தமிழர்கள் வாழவுமே நடவடிக்கைகள் எடுத்து வந்துள்ளனர், வருகின்றனர். பிரதமர் அதற்கு விதிவிலக்காக இனி இருப்பார் என்று நம்பமுடியாதிருக்கின்றது.
iii. தமிழ் மக்களுக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் இடையில் இருக்கும் பிரச்சனைகள் வேறு வேறானவை என்பது.
தமிழ் மக்களைத் தவறாக மாண்புமிகு பிரதம மந்திரி எடை போட்டுள்ளார். தமிழ் மக்களின் ஏகோபித்த உந்துதலே வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை வெளிக்கொண்டு வந்தது. பொங்கி வந்த மக்கள் உணர்வுகளை அரசியல்வாதிகளால் கட்டுப்படுத்த முடியாமல்த்தான் வட்டுக்கோட்டைத் தீர்மானம் எழுந்தது. அதனை இயற்றி அதன் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு மாறாக, அதற்குத் தடை செய்வது போல், நடந்து கொண்ட அரசியல்வாதிகளைக் காலனிடம் அனுப்பியதும் மக்களின் கொதித்தெழுந்த உணர்வுகள் தான். தற்போது மக்கள் மனம் அறியாமல் அவர்கள் நலம் பேணாமல் சுயநலப் பாதைகளில் பயணஞ் செய்ய விழையும் அரசியல்வாதிகளைத் தூக்கி எறிய முன் வந்துள்ளவர்களும் மக்கள் தான். எச்சில் இலைகளில் இருந்து வீசப்படும் எலும்புகளை எதிர்பார்க்கும் ஏமாளிகளாக எமது ஸ்ரீலங்கா பிரதமர் எம்மை எடைபோடக்கூடாது. எமது அரசியல்வாதிகள் மக்களின் மனதுக்கு மாறாக நடக்கின்றார்கள் என்றால் அது பிரதமர் போன்றவர்கள் எமது அரசியல்வாதிகளுக்கு சுயநலப் பாதைகளைக் காட்டி எமது அரசியல்வாதிகள் தமது பாதையும் பயணமும் மாறச் சூழ்ச்சிகள் செய்து வருவதாலேயே. தமிழ் மக்கள் வெறும் பொருளாதார அபிவிருத்தியையே நாடி நிற்கின்றார்கள் என்று பிரதமர் கூறுவது எமது வழி வகையற்ற பாதிக்கப்பட்ட மக்களை எலும்புத் துண்டுகளைக் கொடுத்து தன்பக்கம் ஈர்க்க முடியும் என்று அவர் எண்ணுவதாலேயே. எமது அரசியல்வாதிகள் பலர் பாதை மாறிச் செல்வது உண்மையே. ஆனால் எமது மக்கள் தமது உரிமைகள் பற்றியும் வருங்காலம் பற்றியும் போதிய விழிப்புடன் தான் இருக்கின்றார்கள். மக்களின் மனம் அறிந்த அரசியல்வாதிகள் வெகுவிரைவில் பாராளுமன்றத்தை அலங்கரிக்க வர இருக்கின்றார்கள் என்பதை அவருக்குக் கூறிவைக்கின்றேன். அவற்றைத் தடுக்கு முகமாக சர்வாதிகாரப் போக்கினை அவரின் சகோதரர் எடுப்பாராகில் அதற்கும் முகம் கொடுக்க எமது மக்கள் தயாராகவே உள்ளனர். எம்மையும் எமது மக்களையும் பிரித்தொதுக்கும் நடவடிக்கைகளில் இனியாவது மாண்புமிகு பிரதமர் அவர்கள் ஈடுபடாது இருப்பாராக!
iஎ. வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமானதல்ல என்ற வாதம். இதற்கு அவர் தரும் வாதம் வடக்கு கிழக்கிற்கு அப்பால் தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்பது. ஒரு தாய்க்கு ஐந்து பிள்ளைகள் இருக்கின்றனர். ஐந்தாவது பிள்ளை கைக்குழந்தை. அதற்குத் தேவையான தாய்ப்பாலைக் கொடுப்பது தாயின் கடமை. மாண்புமிகு பிரதமரின் வாதம் என்னவென்றால் நான்கு வேறு பிள்ளைகள் தாய்க்கு உள்ளார்கள். அவர்களுக்கும் தாய்ப்பால் போய்ச் சேரவேண்டும் என்பதால் கைக்குழந்தைக்கு மட்டுமே தாய் பால் கொடுப்பது தவறு என்பதாகும்.
நான் கொழும்பில் பிறந்து வளர்ந்தவன். சிங்கள சகோதரர்களுடன் தோளுக்கு தோள் நின்று உரிமையுடன் வாழ்ந்தவன். ஆனால் அரசாங்கம் வட கிழக்கு மக்களை நடத்தி வருவது என்னை நடத்திய விதத்தில் அல்ல. நான் பெரும்பான்மை மக்களின் இடையில் வாழ்ந்த சிறுபான்மையினன். என்னால் அவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படாது என்று நினைத்து என்னை வளரவிட்டார்கள். ஆனால் 1958ம் ஆண்டும், 1983ம் ஆண்டும் என் உறவினர்கள் பலரை, நண்பர்கள் பலரை, தமிழ்க் கட்சிக்காரர் பலரைப் பாதிக்கத் தவறவில்லை. தமிழ் மக்கள் பெரும்பான்மையினராக வாழும் வடகிழக்கில் அவர்களுக்குரிய மனித உரிமைகளைச் சிங்கள அரசாங்கத்தவர்கள் தடை செய்கின்றார்கள் என்பதே உண்மை.
வடகிழக்கு தமிழ் மக்கள் தமது உரிமைகளைத்தான் கேட்கின்றார்கள். அதை அவர்களுக்குக் கொடுக்காது நாட்டில் பல பகுதிகளிலும் தமிழர்கள் வாழ்கின்றார்கள், ஆகவே வடகிழக்கு மாகாணத் தமிழ் மக்களுக்கு மட்டும் உரிமைகளை வழங்கமுடியாது என்று கூறுவதன் அர்த்தம் என்ன? நீங்கள் உரிமைகள் கேட்டால் இன்னுமொரு 1958யும் 1983யும் தெற்கில் உள்ள தமிழர்களுக்கு எதிராகக் கொண்டு வருவோம் என்பது தானே? இவ்வாறான பூச்சாண்டி காட்டி எமது தமிழ் மக்களை அடிபணிய வைத்த காலம் மலையேறிவிட்டது என்பதை ஐம்பது வருடங்கள் அரசியல் செய்த மாண்புமிகு பிரதமர் உணரவேண்டும். இன்று உலகம் முழுவதிலும் இலங்கை அரசாங்கம் பற்றியும் அதன் அரசியல்த் தலைவர்கள் பற்றியும் போதிய புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. வடக்கு கிழக்குக்கு வெளியில் தமிழர்கள் உள்ளார்கள். ஆகவே வடக்கு கிழக்கு மக்கள் தமது உரிமைகளைக் கேட்கக்கூடாது என்ற சிறுபிள்ளைத்தனமான வாதங்களை மாண்புமிகு பிரதமர் முன்வைக்காமல் இருந்தால் நல்லது. வடகிழக்கிற்கு வெளியில் இருக்கும் தமிழர்கள் தாம் எங்கு வாழவேண்டும். வசிக்க வேண்டும் என்பதைத் தாமே தீர்மானித்துக் கொள்வர்.
தமிழ் மக்களை ஏமாற்றி, பிரித்தானியர்களை ஏமாற்றி சிங்களத் தலைவர்கள் இதுகாறும் வடகிழக்குத் தமிழ் மக்களுக்கு உரிய அரசியல்த் தீர்வினைப் பெற்றுக் கொடுக்காமல் விட்டபடியால்த்தான் இன்று இந்த நாடு சீனாவின் கோரப்பிடிக்குள் சிக்கியுள்ளது. ஹம்பாந்தோட்டையில் 15,000 ஏக்கர் காணியும் கொழும்புத்துறைமுகமும் இப்பொழுது அவர்களின் பராமரிப்பிலேயே இயங்குகின்றன. தொடர்ந்தும் அதற்கு இடம் கொடுக்கப் போகின்றாரா மாண்புமிகு பிரதமர்? வடக்கு கிழக்கு மக்கள் தனிநாடு கேட்டது உண்மைதான். தற்போது அவர்கள் கேட்;பது சட்டம் முழுமையாக ஏற்கும், அங்கீகரிக்கும், வரவேற்கும் ஒரு தீர்வையே. ஒருமித்த நாட்டினில் வடகிழக்குத் தமிழ்ப் பேசும் மக்கள், தாம் ஒரு தேசம் என்ற முறையில் தம்மைத்தாமே ஆளும் உரிமை படைக்க வேண்டும் என்பதையே நாடுகின்றார்கள். அது அவர்கள் பிறப்புரிமை. 3000 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து, அடையாளப்படுத்தப்படக் கூடிய பிரதேசங்களில் தமது மொழி, கலை, கலாச்சாரத்துடன் வாழ்ந்து வந்த மக்கட்கூட்டம் சட்டப்படி கோரும் அவர்கள் உரித்தை வழங்காமல் மாண்புமிகு பிரதமர் வாய்க்கு வந்தபடி பேசுவது அவருக்கு அழகல்ல. அதுவும் இந்திய ஊடகங்களுக்கு மிகுந்த கவனத்துடன் அவர் தமது செவ்விகளை வழங்க வேண்டும் என்று சாதாரண குடி மகனாக நான் கேட்டு வைக்கின்றேன்.
Post a Comment