விக்கினேஸ்வரனை அழைக்கின்றது டெலோ?

ரெலோ என அறியப்படும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் நான்காவது பிளவை சந்தித்துள்ள நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிட முன்வருமாறு வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ரெலோவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைகலநாதன் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக விக்னேஸ்வரன் உருவாக்கியுள்ள புதிய கூட்டணியை மேலும் பலப்படுத்தி எதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுமாறும் அவர் கேட்டுள்ளார்.
புதிய கூட்டணியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைவதன் மூலம் பலமிக்க ஒரு கூட்டமைப்பு உருவாகும் எனவும் அதனூடாக பெரும்பான்மையான பாராளுமன்ற ஆசனங்களை வெற்றிக்கொள்ள முடியும் என தாம் கருதுவதாகவும் அடைகலநாதன் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டால் புதிய தலைமைத்துவத்துவத்துடன் இணைந்து பயணிப்பது குறித்து பரிசீலனை செய்ய முடியும் என விக்னேஸ்வரன் கூறியுள்ளமை தொடர்பில் அடைகலநாதனிடம் வினவிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ரெலோ அமைப்பின் மத்திய செயற்குழு கூட்டம் கடந்த 19 ஆம் திகதி வவுனியாவில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது.
அந்த கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், விக்னேஸ்வரனுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வருவதாகவும், ஆகவே அவர் தலைமையில் அமையும் புதிய கூட்டணியில் இணைய தயார் எனவும் அண்மை காலமாக ரெலோ அமைப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடதக்கது.

No comments