சர்வதேசம் மதிக்கும் தலைமை நான்; சங்கரி இறுமாப்பு

தென்னிலங்கை சர்வதேச சக்திகள் மதிக்கும் ஒரே தமிழ் தலைமை நான்தான் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

ஆனந்தசங்கரி இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும்,

 நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் சரி முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளுக்கு நன்றிக்கடன்பட்டவர்கள்.

2004ஆம் ஆண்டு த.வி.கூட்டணியை கூட்டுச்சதி மூலம் வெளியேற்றிவிட்டு 28 வருடங்கள் இயங்காமலிருந்த தமிழரசுக் கட்சியை விடுதலைப் புலிகளின் ஒத்துழைப்புடன் புதிதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார்கள். விடுதலைப் புலிகளின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டது என்று நம்பிய காரணத்திற்காக தமிழ்மக்களும் ஆதரித்தார்கள்.

2004ம் ஆண்டு தேர்தலில் எவரையும் வாக்களிக்கவிடாது தடுத்து அனைத்து தேர்தல் ஜனநாயக விழுமியங்களையெல்லாம் மீறி புலிகளின் முழு ஆதரவுடன் வெற்றி பெற்றார்கள்.

அதன் காரணமாகவே புலிகளால் உருவாக்கப்பட்ட கட்சி என்று எண்ணிய காரணத்தினால் தமிழ் மக்களும் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவடைந்த பின்பும் ஆதரவு அளித்தார்கள்.

இன்று உடம்பில் குண்டுச் சிதறல்களுடன் நாளாந்த சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் முன்னாள் போராளிகளின் முழு ஒத்துழைப்பால் பதவிக்கு வந்துவிட்டு இன்று அவர்கள் படும் கஷ்டங்களை வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு, வானுயர்ந்த வீடுகள், காணிக்கு மேல் காணிகள் வாங்கிக் கட்டடங்களைக் கட்டிக்கொண்டு இருக்கின்றார்கள்.

ஏமாந்தது போதும். யுத்தம் நடத்திய தரப்பு இப்போது பதவிக்கு வந்துள்ளது. அந்தக் கால கட்டங்களில் நடுநிலையாக நின்று ஜனநாயக ரீதியில் விடுதலைப் புலிகளுக்கும், முன்னைய ஜனாதிபதிக்கும் பல கடிதங்கள் மூலம் வேண்டுகோள் விடுத்த ஒரே கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி மட்டும்தான்.

எனவே வாருங்கள் அனைவரும் கூட்டணியில் இணைந்து செயற்பட்டு, எமது மக்களின் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வைக் காண்போம் - என்றார்.

No comments