இது பௌத்த நாடு; நீராவியடி விவகாரத்தில் கொக்கரித்த ஆனந்த

முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய விடயத்தில் தமிழர் தரப்பே குழப்பங்களை ஏற்படுத்தி ஒட்டுமொத்த சிங்கள மக்களையும் வேதனைப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வின்போது நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த நாடு சிங்கள பெளத்த நாடு எனபதனால் இங்கு தேரர்களின் தலைமைகளுக்கு இடமளிக்க வேண்டும்.

அவ்வாறு செயற்பட்டால் இன்று பிரச்சினைகள் இருக்காது, இந்த நிலப் பிரச்சினையை தேரர்களிடம் விட்டிருந்தால் இந்த பிரச்சினை இவ்வளவு தூரம் வந்திருக்காது. இந்த பிரச்சினை பெரிதாக வளர தமிழ் தரப்பே காரணம். அவர்கள் பேசாமல் இருந்திருந்தால் ஒரு பிரச்சினை வந்திருக்காது.

அவர்களின் இந்த செயலால் தெற்கில் மக்கள் மத்தியில் பாரிய அழுத்தம் ஏற்பட்டுள்ளது. அந்த தேரர் இறந்தால் அங்கு இறுதிக் கிரியைகள் செய்ய வேண்டும். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு மிகவும் மோசமாக நடந்துகொண்டுள்ளது.

இங்கு கொழும்பில் சிங்கள மக்களுடன் வாழ்ந்துகொண்டு செயற்படுவது இவ்வாறு குழப்பங்களை ஏற்படுத்துவது தவறானது” என ஆனந்த அளுத்கம தெரிவித்துள்ளார்.

No comments