தொடர்ந்தும் புலனாய்வு அச்சுறுத்தலாம்?


இலங்கை காவல்துறையினால் அரங்கேற்றப்பட்ட சுன்னாகம் காவல்நிலைய படுகொலை சாட்சி தொடர்ந்தும் இலங்கை இராணுவபுலனாய்வு மற்றும் காவல்துறை அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மாவீரர் நாளை ஒட்டி மாணவர்களுக்கு புத்தக பைகளை வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டு பின்னர் வீடொன்றில் கொள்ளையிட்டதாக குற்றஞ்சாட்டி கைதாகயிருந்த குறித்த பொதுமகனான து.லோகேஸ்வரன் நேற்று குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

தம் மீதான பொய் குற்றச்சாட்டு மற்றும் சித்திரவதை, கொலை ஆகியவற்றுடன் தொடர்புடைய பலர் இன்னும் வெளியில் இருக்கும் நிலையில் இந்த குற்றவாளிகளுக்கும் தண்டணை வழங்கப்படவேண்டும் என கோரியுமுள்ளார்.அத்துடன்  சுதந்திரமாக வாழ வழி செய்யப்படவேண்டும் எனவும்  இன்று யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்துள்ளார்.

2011ம் ஆண்டு கார்த்திகை மாதம் 21ம் திகதி பெற்றோரை இழந்த பாடசாலை மாணவர்களுக்காக 110 புத்தக பைகளை தற்போதைய யாழ்.மாநகர முதல்வர் இ.ஆனல்ட் வழங்கியிருந்தார். அதனை நானும், சுமணன் உள்ளிட்ட சிலரும் இணைந்து மாணவர்களுக்கு வழங்கினோம். அப்போது அங்குவந்த இராணுவ புலனாய்வாளர்கள், மாவீரர் நாளுக்காக புத்தக பைகளை வழங்குகிறீhகளா? என கேட்டிருந்தனர். ஆனால் அப்படியான நோக்கத்தில் நாங்கள் புத்தக பைகளை கொடுக்கவில்லை என்பதை அப்போதே கூறியிருந்தோம்.

பின்னர் அன்றைய தினம் இரவு 10 மணியளவில் எங்கள் வீட்டுக்குள் நுழைந்த இராணுவத்தினர், மற்றும் காவல்துறையினர் வீடொன்றுக்குள் புகுந்து பல லட்சம் பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டதாக குற்றஞ்சாட்டி என்னையு ம், சுமணனையும் கைது செய்தார்கள்.இந்நிலையில் கைது செய்யப்பட்டு நேரடியாக ஊரெழு இராணுவ முகாமுக்கும் காவல்நிலையத்திற்கும் கொண்டு செல்லப்பட்ட நாம் அங்கு தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்டு கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டோம்.

அங்கும் சித்திரவதை மேற்கொண்ட நிலையிலேயே சுமணன் உயிரிழந்தார். பின் 5 நாட்கள் கடந்த நிலையில் 2011 கார்த்திகை 26ம் திகதி நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு,பிணையில் விடுதலை செய்யப்பட்டோம்.

களவு எடுத்ததாக சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு நடை பெற்றுக் கொண்டிருந்தபோது இந்த விடயத்தை நாங்கள் நீதிபதிக்கு கூறியதன் அடிப்படையில் சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். கொள்ளை வழக்கும் பொய் வழக்கு என்பது 8வருடங்களின் பின்னர் நீதிமன்றத்தால் கூறப்பட்டுள்ளது.


No comments