சஜித்திற்கு ஆதரவு கூடுகின்றது?


எதிர்வரும் வியாழக்கிழமைக்குள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என அமைச்சர் ரவூக் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சிக்கும், ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று நேற்று (19) இரவு நடைபெற்றது.
இந்த கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் ரவூக் ஹக்கீம் இதனை தெரிவித்தார்.
மேலும், பிற்போடப்பட்டுள்ள ஐக்கிய தேசிய முன்னணியின் யாப்பு குறித்த பேச்சுவார்த்தை நடத்தவே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக அவர் கூறினார்.
பிரபல்யமான வேட்பாளர் யார் என்பதை சிறுபான்மை கட்சிகள் ஏற்கனவே பிரதமரிடம் கூறியுள்ளதாகவும், அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாவிடின் தோல்வி நோக்கி பயணிக்க முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஒரே கட்சியை சேர்ந்த இருவர் ஜனாதிபதியாகவும், பிரதமராகவும் தெரிவானால் எதிர்காலத்தில் அரசாங்கத்தை கொண்டு நடத்துவதில் பிரச்சினை இருக்காது எனவும், ஏற்கனவே தாம் சஜித் பிரேமதாசவை பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அவரை களமிறக்கினால் நிச்சயம் வெற்றிப்பெற முடியும் என்பதே தனது உறுதியான நிலைப்பாடு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் போது அமைச்சர் சஜித் பிரேமதாசவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
தொடர்ந்தும் இந்த பிரச்சினையை இழுத்தடிக்க முடியாது. எனவே, எதிர்காலத்தில் சிறந்த முடிவை எடுப்பார்கள். ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளராக தான் நியமிக்கப்படுவது உறுதி. காலகிரமத்தில் அந்த செயற்பாடு நடைபெறும்.
அடுத்துவரும் 3 அல்லது 4 நாட்களுக்குள் இறுதி முடிவு வெளியாகும் என்பதே எனது நம்பிக்கை. நான் போட்டியிட்டால் 51 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற முடியும். மற்றைய கட்சிகளின் நிலை தொடர்பில் எனக்கு தெரிவிக்க முடியாது என்றார்.

No comments