Header Shelvazug

http://shelvazug.com/

எழுக தமிழ் எழுந்ததா? வீழ்ந்ததா? இரண்டுக்கும் தமிழ்த் தலைமைகளே பொறுப்பு - பனங்காட்டான்

வெற்றிக்குப் பல தந்தையர் உண்டு, ஆனால் தோல்வி எப்போதுமே அநாதைதான் என்ற பழமொழியை எழுக தமிழ் நிகழ்வுக்குக் கூறுவது பொருத்தமானது. எழுக தமிழ் எழுந்ததா வீழ்ந்ததா என்று கேட்டால், இரண்டுக்கும் தமிழ்த் தலைமைகளின் ஒற்றுமையின்மையே பொறுப்பு என்பதே பதிலாக அமையும். இந்த ஒற்றுமையின்மை இப்படியே தொடருமானால் வரப்போகின்ற சகல தேர்தல்களிலும் இது நிச்சயம் பிரதிபலிக்கும். அது முழுத்தமிழினத்தையும் நிச்சயம் பாதிக்கும். 

இலங்கையை வடக்கு தெற்கு என்று இரண்டாகப் பிரித்தால் இந்த வாரம் அதிவெப்பம் கண்ட பிரச்சனைகள் இரண்டு. இவை ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டவையாகவும், சம்பந்தமில்லாதவையாகவும் காட்சி கொடுக்கின்றன.

தெற்கைப் பொறுத்தளவில் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் ஏற்படும் உடன்பாடும் முரண்பாடும் ஊடகங்களுக்கு அளவுக்கு மீறிய தீனியாக அமைந்துள்ளது.

வடக்கைப் பொறுத்தளவில் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற எழுக தமிழ் நிகழ்வு எழுந்ததா? அல்லது வீழ்ந்ததா, என்ற சர்ச்சை சோதனைக் களத்தில் இடம்பெறுகிறது. முதலில் தெற்கு நிலைமையை அவதானிப்போம்.

பொதுஜன பெரமுன கோதபாய ராஜபக்சவையும், ஜே.வி.பி. அனுர குமார திசநாயக்கவையும் வேட்பாளராக நியமித்துள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறுமென்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான கட்டுப்பணம் செலுத்துவது அக்டோபர் 6ஆம் திகதிவரை தொடரும். அக்டோபர் 7ஆம் திகதி வேட்புமனு தாக்கல் செய்யும் நாள்.

இதற்கு முன்னராக இரண்டு முக்கிய கட்சிகள் தங்கள் வேட்பாளரை நியமிக்க வேண்டும்.

மகிந்தவின் பொதுஜன பெரமுனவுக்கும், மைத்திரியின் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையில் இணக்கம் ஏற்படவில்லையெனில், மைத்திரி தமது கட்சிச் சின்னத்தில் போட்டியிடுவாரென மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு பிரச்சனையாகவிருப்பது பொதுச் சின்னமே.

இதில் மறைந்திருக்கும் உண்மை என்னவெனில், அடுத்த வருட முற்பகுதியில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் சுதந்திரக் கட்சிக்கான ஆசனங்களை முற்கூட்டியே தீர்மானிக்க வேண்டுமென்ற மைத்திரியின் நிலைப்பாடு.

இந்தப் பின்னணியில் கொழும்பில் இடம்பெற்ற தெற்காசியாவின் உயர்ந்த கோபுரமான தாமரைக் கோபுர திறப்பு விழாவுக்கு மகிந்தவை மைத்திரி அழைக்காததும், இதன் கட்டிட அமைப்பில் இரண்டு கோடி ரூபா ஏப்பம் விடப்பட்டதாக மகிந்தவை நோக்கி விரல் சுட்டி மைத்திரி நிகழ்த்திய உரையும் களேபரமொன்றை ஏற்படுத்தியுள்ளது.

டி.ஏ.ராஜபக்ச நினைவு அருங்காட்சியக நிர்மாணத்தில் கோதபாய சம்பந்தப்பட்ட நிதி மோசடி, தாமரை கோபுர கட்டிட நிர்மாணத்தில் மகிந்த சம்பந்தப்பட்ட நிதி மோசடி, மத்திய வங்கி ஊழலில் ரணில் சம்பந்தப்பட்ட நிதி மோசடி என்ற முக்கோணப் பட்டியலொன்றை தேர்தல் தருணம் பார்த்து மைத்திரி கையிலெடுத்துள்ளார்.

ரணில் மீது மைத்திரி கை வைப்பாரானால் அவரது ஜனாதிபதி ஆசையை அது நிர்மூலமாக்கும். கோதபாய மீது அருங்காட்சியக நிதி மோசடி அம்பு பாயுமானால் அவரது ஜனாதிபதி ஆசையும் நிராசையாகும். இந்தச் சூழ்நிலையை தமக்காகப் பயன்படுத்த மைத்திரி நப்பாசை கொண்டுள்ளார்.

முடியுமானால், அபேட்சகர் நியமன நாளான 7ஆம் திகதிக்கு முன்னர் ரணிலையும் கோதபாயவையும் உள்ளே தள்ள முடியுமா என்றும் மைத்திரியின் சட்டப்பிரிவினர் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.

சஜித் பிரேமதாச போட்டியிட ரணில் விட்டுக்கொடுப்பாரானால் அவர்மீது சட்டம் பாயாமல் தடுக்கும் அதிகாரமும் மைத்திரியிடம் உள்ளது.

சிலசமயம் இறுதியில் மைத்திரியின் நிலைமை பொரிமாத் தோண்டி கதையாகவும் ஆகிவிடலாம்.

இதற்கிடையில், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அரசமைப்பின் 20ஆம் திருத்தத்தை நிறைவு செய்து, ஜனாதிபதி ஆட்சிமுறையை இல்லாமற் செய்ய திரைமறைவில் எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரியின் அனுசரணையுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்த இந்த முயற்சியை 19ஆம் திகதிய அமைச்சரவைக் கூட்டம் தூக்கி எறிந்துவிட்டது. அதற்கு முன்னர் ஐக்கிய தேசிய முன்னணியின் உயர்மட்டக் கூட்டமும் இதனை நிராகரித்துவிட்டது.

சஜித் பிரேமதாச ஆதரவு அமைச்சர்களே இந்த முறியடிப்பை நிகழ்த்தி, மைத்திரியினதும் ரணிலினதும் முகத்தில் கரி பூசியுள்ளனர்.

அடுத்து வரும் நாட்கள் இவ்விவகாரங்களில் பல திருப்பங்களை நிச்சயமாக ஏற்படுத்தும்.

இனி, யாழ்ப்பாணம் முற்றவெளியில் 16ஆம் திகதி இடம்பெற்ற எழுக தமிழ் நிகழ்வைப் பார்ப்போம்.

முன்னைய எழுக தமிழ் நிகழ்வுகளுடன் ஒப்பிடுகையில் இம்முறை நிகழ்வு வெற்றி பெறவில்லையென்று ஓரிரு ஊடகங்களும், அணிகள் சார்பு சமூக ஊடகங்களும் விளாசியுள்ளன.

ஆனால், பெருமளவிலான பொது ஊடகங்கள் அதற்கு மாறாக செய்தி வெளியிட்டுள்ளன.

உதாரணத்துக்கு கொழும்பிலிருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்தும் வெளிவரும் தினக்குரல் நாளிதழ் 17ஆம் திகதிய வெளியீட்டின் முன்பக்கத் தலைப்பு செய்தியாக, “தமிழர் உரிமைகளை வலியுறுத்தி எழுக தமிழ் பேரெழுச்சி” என்ற கொட்டை எழுத்துகளின் கீழ், அலையெனத் திரண்ட தமிழ்ச் சமூகம் - வானதிர்ந்த உரிமைக் கோசம் - முற்றாக முடங்கியது வடக்கு என்று உபதலையங்கங்களை இட்டுள்ளது.

முன்னைய எழுக தமிழ் நிகழ்வுகளோடு ஒப்பிடுகையில் இம்முறை பங்குபற்றியோர் எண்ணிக்கை குறைவு என்பதை அனைவருமே ஒப்புக் கொண்டுள்ளனர். இம்முறை ஆகக்கூடியது ஐயாயிரம் பேர்வரை பங்குபற்றினர் என்று பலரும் தெரிவித்துள்ளனர்.

ஆனால், ஒளிப்படங்களைப் பார்க்கையில் அவ்வாறு காணப்படவில்லை. இதற்குக் காரணம் முற்றவெளியின் அன்றைய நில அமைப்பு என்று ஓர் அரசியல் நோக்கர் தெரிவித்துள்ளார்.

கடும் மழை காரணமாக மேடைக்கு முன்னாலுள்ள பள்ளப் பிரதேசத்தில் வெள்ளம் நின்றதால் அதனைச் சுற்றி மக்கள் கூடிநிற்க நேர்ந்ததென்றும், அதனை வைத்து மக்கள் தொகையை மதிப்பிடுவது தவறு என்பதும் இவரது கூற்று.

அன்றைய நாள் யாழ். பல்கலைக்கழக சிற்றூழியர்களின் பணிப்புறக்கணிப்பு, போக்குவரத்துச் சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு என்பவை இடம்பெற்றதாலும், கடையடைப்புகள் நடைபெற்றதாலும் பெருமளவானோர் விரும்பியும் பங்குபற்ற முடியாது போனதாக இன்னொரு கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

16ஆம் திகதி திங்கட்கிழமை வேலை நாள் என்பதால் அரசாங்க ஊழியர்களும், பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களும் பங்குபற்ற முடியாது போனதென்பது வேறு சிலரின் கருத்து.

இவற்றுக்கு அப்பால் அரசியல் ரீதியான காரணங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த நிகழ்வை அறவே விரும்பவில்லை. அதேசமயம், இவ்விடயம் தங்களின் வாக்கு வங்கியை எதிரிகாலத்தில் பாதிக்கும் என்ற அச்சத்தால் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தமது கருத்தை வெளியிட நேர்ந்தது.

தனி ஒருவரை மையப்படுத்தி இந்த நிகழ்வு இடம்பெறக்கூடாது என்று தெரிவித்த இவர், இவ்வாறான நிகழ்வுகளில் மக்கள் பங்கெடுப்பர் என்று பட்டும்படாமலும் கூறினார். தனியொருவர் என்று இவர் குறிப்பிட்டது முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையே. மாவையரும் சித்தார்த்தனும் எழுக தமிழுக்கான எதிர்க் கருத்துகளையே வெளியிட்டிருந்தனர்.

விக்னேஸ்வரன் அணியில் ஒன்றித்திருந்த அனந்தி சசிதரனைப் பற்றி எதுவுமே தெரியவில்லை. முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன் ஒட்டியும் ஒட்டாமலும் காணப்பட்டார். சில தரப்புகளை உள்வாங்கும் பணியை ஏற்றுக் கொண்ட இவர் அதனை முழுமனதுடன் நிறைவேற்றாது ஒதுங்கி நின்றதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்தில் முன்னின்று உழைத்த கஜேந்திரகுமாரின் தமிழ்த் தேசிய முன்னணி இதனை முழுமையாக புறக்கணித்தது.

15ஆம் திகதி இரவு இவர்களை எழுக தமிழில் இணைக்க யாழ். பல்கலைக்கழக வளாகத்துள் எடுக்கப்பட்ட முயற்சியில் பல நிபந்தனைகளுக்கு பேரவையினர் உடன்பட்ட போதிலும், முன்னணியினர் சகலவற்றையும் உடைத்துவிட்டதாகவும் பரவலான பேச்சு உண்டு.

ஆக, இவ்வருட எழுக தமிழ் நிகழ்வை முன்னைய நிகழ்வுகளுடன் ஒப்பிடுகையில் மக்கள் தொகையிலும், அரசியல் அணிகளின் பங்களிப்பிலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லையென்பதை பல தரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

கஜேந்திரகுமார் அணியினரின் பங்கேற்பு இல்லாததை முக்கிய காரணமென ஒரு தரப்பினரும், கூட்டமைப்பின் ஆதரவின்மையை முதன்மைக் காரணமென இன்னொரு தரப்பினரும் கூறி வருகின்றனர். தமிழ் மக்கள் பேரவையின் அண்மைக்கால குறைவான செயற்பாடுகளும், விக்னேஸ்வரனின் ஆளுமைக் குறைவுமே இதற்குக் காரணமென்பது வெவ்வேறு அரசியல் பின்னணியைக் கொண்டவர்களின் கருத்து.

அடிப்படையில், இன்றைய காலகட்டத்துக்கு அத்தியாவசியமான ஆறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்றது எழுக தமிழ் என்பதை நினைவிற் கொள்ள ஏனோ தமிழ்த் தலைமைகள் மறந்துவிட்டன என்று கூறவேண்டியுள்ளது.

வெற்றிக்குப் பல தந்தையர் உண்டு, ஆனால் தோல்வி எப்போதுமே அநாதைதான் என்ற பழமொழியை எழுக தமிழ் நிகழ்வுக்குக் கூறுவது பொருத்தமானது.

எழுக தமிழ் எழுந்ததா வீழ்ந்ததா என்று கேட்டால், இரண்டுக்கும் தமிழ்த் தலைமைகளின் ஒற்றுமையின்மையே பொறுப்பு என்பதே பதிலாக அமையும்.

இந்த ஒற்றுமையின்மை இப்படியே தொடருமானால் வரப்போகின்ற சகல தேர்தல்களிலும் இது நிச்சயம் பிரதிபலிக்கும். அது முழுத்தமிழினத்தையும் நிச்சயம் பாதிக்கும்.

No comments