கட்சி விரும்பும் வேட்பாளருக்கு மட்டுமே ஆதரவு

ஜனாதிபதி வேட்பாளராக கட்சி பெயரிடும் நபருக்கு ஆதரவு வழங்குவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இதனை கூறினார். 

வேட்பாளர் விடயத்தில் கட்சியின் செயற்குழு மாத்திரம் முடிவெடுக்காது எனவும் மாறாக அமைச்சர்கள் குழு மற்றும் பாராளுமன்ற குழு ஆகியவை உள்ளிட்ட அனைவரும் சேர்ந்து முடிவெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அதற்கமைய கட்சி ஏகோபித்து எடுக்கும் முடிவுக்கு தான் ஆதரவளிப்பதாகவும் குறிப்பிட்டார். 

குறிப்பாக அமைச்சர் சஜித்தானாலும், சபாநாயகர் கரு ஜயசூரியவானாலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவானாலும் தான் ஆதரவு வழங்குவதாகவும் அதில் எந்தவித பிரச்சினையும் இல்லை எனவும் அவர் கூறினார்.

இந்த சந்தர்ப்பத்தில் அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்கள் ருவான் விஜேவர்தனவிற்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எண்ணம் இல்லையா? என வினவினர். 

அதற்கு பதிலளித்த இரராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, தன்னைவிட முதிர்ச்சியடைந்தவர்கள் கட்சியில் உள்ளதாகவும், எதிர்க்காலத்தில் மக்கள் கோரினால் தான் போட்டியிடுவது குறித்து சிந்திப்பேன். என்றார்.

No comments