காஷ்மீரை போல தமிழகமும் பிரியும் ஆபத்து! சீமான் எச்சரிக்கை

காஷ்மீரை போல தமிழகத்தையும் வடதமிழகம், தென்தமிழகம் என 2 ஆக பிரிப்பார்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை கடந்த 5-ந்தேதி ரத்து செய்த மத்திய அரசு அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதுதொடர்பான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி, `காஷ்மீர் விவகாரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. 370 சட்டப்பிரிவை ரத்து செய்ததன் மூலம் சர்தார் வல்லபாய் படேல், வாஜ்பாய் ஆகியோரின் கனவுகள் நனவாகியுள்ளது. 

காஷ்மீர் மாநிலத்தில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. காஷ்மீரில் ஊழல் மற்றும் பயங்கரவாதத்திற்கு உதவவே சட்டப்பிரிவு 370 உதவியது. காஷ்மீரின் வளர்ச்சிக்கு இந்த சட்டப்பிரிவு இதுவரை தடையாக இருந்தது.
370 சட்டப்பிரிவு ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் மக்களை எவ்வாறு பாதித்தது என்பதைக்கூற இங்கும் யாரும் இல்லை. இந்த சட்டப்பிரிவு ரத்தால் அந்த மாநில மக்களுக்கு கிடைக்கும் சலுகைகள் குறித்து பேச இங்கு யாரும் இல்லாதது ஆச்சர்யமளிக்கிறது. 
ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றியது தற்காலிக முடிவுதான். அதேநேரம், லடாக் யூனியன் பிரதேசமாகவே தொடரும். காஷ்மீர் மக்களின் உரிமைகள் நிலைநிறுத்தப்படும். அந்த உரிமை அவர்களுக்கு என்றும் நிலைத்திருக்கும். காஷ்மீரில் சினிமா படப்பிடிப்புகளுக்கான தடைகள் நீக்கப்படும் என்று அவர் கூறினார்.
இதற்கு பல கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இதேபோல், பிரபலங்கள் மத்தியிலும் ஆதரவும், எதிர்ப்பும் கலந்து வந்தன. 
இதுகுறித்து முன்னாள் மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் கூறும்போது, தமிழகத்தை இந்த மோடி அரசு சேர, சோழ, பாண்டிய நாடு என 3-ஆக பிரித்தாலும் அதை அதிமுக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் என்று அவர் கூறியிருந்தார். 


இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், காஷ்மீரை போல தமிழகத்தையும் நாளை இரண்டாக பிரித்தாலும் பிரிப்பார்காள். வட தமிழகம், தென் தமிழகம் என இரண்டாக பிரித்து, சென்னையை புதுச்சேரி போல யூனியன் பிரதேசமாக மாற்றுவார்கள். நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை பிரிக்கலாம். ஆனால் மாநிலங்களை பிரிக்கக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

 

No comments