அணு ஆயுதப்போர் வந்தால் இரு நாடும் தாங்காது; விரக்தியில் இம்ரான்

அணு ஆயுதப்போர் வந்தால் இரு நாடு மட்டுமல்ல இந்த உலகமே தாங்காது   என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கவலை வெளியிட்டுள்ளார.

பாகிஸ்தான் மக்களுக்கு உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீரில் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ளும் வரை பாகிஸ்தான், காஷ்மீர் மக்கள் பக்கமே நிற்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் தங்கள் எதிர்கால நிலைப்பாடு பற்றி சுட்டிக்காட்டிய இம்ரான் கூறியதாவது:
ஒட்டுமொத்த பாகிஸ்தானும் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். காஷ்மீர் தூதராக நான் செயல்படுவேன் என்று நான் ஏற்கெனவே தெரிவித்திருந்தேன்.
உலகிற்கு நான் இதைத் தெரிவிப்பேன். நான் இதனை பிற நாட்டுத் தலைவர்களிடமும் பகிர்ந்து கொண்டுள்ளேன். ஐநா பொதுச்சபையிலும் நான் இந்த பிரச்சினையை பேசுவேன்.
முஸ்லிம் நாடுகள் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக இல்லை என்று மக்கள் ஏமாற்றமடைவதாக நான் செய்தித்தாள்களில் பார்க்கிறேன். நான் உங்களுக்குக் கூறுவது என்னவெனில் ஏமாற்றமடையாதீர்கள் என்பதே. சில நாடுகள் தங்களின் பொருளாதார நலன்களுக்காக நிலைப்பாடு எடுக்காமல் இருக்கின்றனர், ஆனால் இவர்களும் காலப்போக்கில் காஷ்மீர் மக்கள் பக்கம் நிற்பார்கள். அவர்கள் நிலைப்பாடு எடுத்தேயாக வேண்டும்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கி பிரதமர் மோடி வரலாற்றுத் தவற்றைச் செய்துள்ளார். இது ஐநாவின் பொறுப்பு, காஷ்மீர் மக்களைப் பாதுகாக்க ஐநா உறுதியளித்துள்ளது. வரலாற்று ரீதியாக உலக அமைப்பு எப்போதும் சக்திவாய்ந்த நாடுகளின் பக்கமே நின்றுள்ளது, ஆனால் இம்முறை ஐநாவுக்குத் தெரியவேண்டும் 1.25 பில்லியன் முஸ்லிம் மக்கள் ஐநாவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பதை.
இந்தப் பெரிய நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டு பொருளாதார நலன்களை மட்டுமே கவனித்துக் கொண்டிருப்பார்களா? இருநாடுகளிலும் அணு ஆயுதம் உள்ளது என்பதை இந்த பெரிய நாடுகள் நினைவில் கொள்ளட்டும். அணு ஆயுதப் போரில் யாரும் வெற்றி பெற முடியாது. இது இந்தப்பகுதியை மட்டும் அழிக்காது, உலக அளவிலும் கூட பெரிய விளைவுகள் ஏற்படும். இப்போது சர்வதேச நாடுகள் முடிவெடுக்கட்டும்” என்று பேசியுள்ளார்.

No comments