கோத்தா டெல்லி பயணம்:மைத்திரி-மகிந்த பேச்சுக்கு முயற்சி!


அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரென கூறப்படும் கோத்தபாய டெல்லி செல்லவுள்ளார்.டெல்லியில் இந்திய பிரதமர் மோடி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் பேச்சுக்களிற்காக அவர் நேரமொதுக்கி கேட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அமெரிக்க அரசுடனான ஒப்பந்தத்திற்கு மைத்திரி –ரணில் அரசு பின்னடித்துவருகின்ற நிலையில் அமெரிக்க தூதர் மகிந்தவை நேரடியாக தேடிச்சென்று சந்தித்திருந்தார்.இந்நிலையில் கோத்தாவின் டெல்லி விஜயமும் முக்கியத்துவம் பெறுகின்றது.

இதனிடையே எமக்கு பலமான கூட்டணியொன்றை அமைப்பதற்கான பலம் உள்ள நிலையில், எந்தவொரு கட்சியுடனும் பின்னால் சென்று பின்வரிசையில் அமர்ந்து கொண்டிருக்கத் தேவையில்லையென சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சியின் பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார். இக்கூட்டத்தில் பொதுஜன பெரமுனவுடன் செயற்பட்ட சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் குமார வெல்கமவும் கலந்துகொண்டார்.

நாம் யாருக்கும் கீழ்படிந்து அரசாங்கம் அமைக்க தயாரில்லை. பலமான கூட்டணி ஒன்றை அமைக்கும் பணியில் நாம் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம் எனவும் அவர் மேலும் கூறினார்.

லங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பதற்கான ஆறு தடவைகள் கலந்துரையாடல்கள் இடம்பெற்று தீர்வுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் இவ்வாறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இன்னும் இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதில் ஜனாதிபதியும் எதிர்க் கட்சித் தலைவரும் நேரடியாக கலந்துகொள்ளச் செய்யப்படுவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

No comments