கௌதாரி மண் வியாபாரத்திலும் டக்ளஸ்?


வடமராட்சி கிழக்கினை தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டம் கௌதாரிமுனையில் மண் வியாபாரத்தில் டக்ளஸ் தேவானந்தா ஈடுபட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.இதனிடையே  அப்பகுதியில் மணல் அகழ்விற்கு விண்ணப்பித்துள்ள போதும் அனுமதி கிடைக்கப்பெறாத கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் முறைப்பாட்டையடுத்து மாவட்ட நிர்வாகங்களின் முறையான அனுமதி இன்றி அகழப்படும் மணல் அகழ்வினை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு அமைச்சர் அஜித் மாதம்பெரும தெரிவித்துள்ளார்.

இதனிடையே புவிச் சரிதவியல் திணைக்களத்திற்கு மாவட்டச் செயலாளரும்; கடிதம் அனுப்பி வைத்துள்ள நிலையில் குறித்த அகழ்வு நிறுத்தப்பட்டுள்ளது. 
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கௌதாரிமுனைப் பகுதியில் மணல் அகல்விற்காக 2018ஆம் ஆண்டு ஆறு தனி நபர்கள் அனுமதிக்காக பிரதேச செயலகம் ஊடாக விண்ணப்பித்திருந்தனர். இவ்வாறு விண்ணப்பித்தவர்களிற்கு அனுமதி வழங்குவதனை அப்பகுதி மக்களும் பொது அமைப்புக்களும் விரும்பாத காரணத்தினால் குறித்த தகவலுடன் பிரதேச செயலாளர் மாவட்டச் செயலாளருக்கு அனுப்பியிருந்தார்.

இவ்வாறு மாவட்டச் செயலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட விடயம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் ஆராயப்பட்ட நிலையில் குறித்த இடத்தில் மணல் அகழ்விற்கு அனுமதிக்க முடியாது என தீர்மானிக்கப்பட்டு அத்தீர்மானம் உரிய திணைக்களங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் புவிச் சரிதவியல் திணைக்களத்தின் அனுமதியுடன் டக்ளஸின் சகோதரரான தயானந்தாவிற்கு மணல் அகழ்விற்கான அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அங்கே வகை தொகையற்ற மணல் அகழ்வு இடம்.பெறுகின்றது. இதனை அப் பகுதி அமைப்புக்கள் பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் பிரதேச செயலாளர் மாவட்டச் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இவற்றின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் உரிய முறையிலான சிபார்சுகள் இன்றி வழங்கப்பட்ட அனுமதியினை உடன் இரத்துச் செய்யுமாறு மாவட்டச் செயலாளர் சு.அருமைநாயகம் அவசர கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்திருந்தார்.இந்த நிலையில் தற்போது குறித்த பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரால் மாவட்ட பிரதிநிதிகளிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

No comments