யாழ்.மாநகரசபை:கூட்டமைப்பிற்கு 6 மாத காலக்கெடு?


முதல்வர் இமானுவேல்ட் ஆனோல்ட் தலைமையிலான யாழ்.மாநகரசபை ஆட்சிக்கு இன்னும் ஆறு மாத ஆயட்காலமே இருப்பதாக ஈபிடிபி அறிவித்துள்ளது.

போதிய ஆசனங்களை ஆட்சியமைக்க கூட்டமைப்பு தேர்தலில் பெற்றிராத நிலையில் ஈபிடிபியின் ஆதரவுடனேயே அது ஆட்சியை கைப்பற்றியிருந்தது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி வசம் ஆட்சி செல்வதை தடுக்க ஈபிடிபி கூட்டமைப்பினை சுமந்திரனது கோரிக்கையின் பேரில் ஆதரித்ததாக சொல்லப்பட்டிருந்தது.

இந்நிலையில்யாழ் மாநகரசபையின் ஆட்சி அமைக்கப்பட்டு ஒன்றரை வருடங்கள் கழிந்துள்ளபோதும் அதன் செயற்பாடுகள் முதல்வரின் தன்னிச்சையான செயற்பாடுகளால் பெறுமதியற்றவையாகவே காணப்படுகின்றதென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான றெமீடியஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில் இதை மாற்றியமைப்பதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் முயற்சிகளை பல சந்தர்ப்பங்களில் மேற்கொண்ட போதிலும் யாழ் மாநகரசபையில் மற்றுமொரு எதிர்த்தரப்பாக இருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்வராமையே இந்த தன்னிச்சையான போக்குக்கு காரணமாக அமைகின்றது எனவும் தெரிவித்திருந்தார்.

தற்போதைய உள்ளுராட்சி சபை யாப்பின் அடிப்படையில் முதல்வர் ஒருவருக்கு எதிராக முதல் இரண்டுவருடங்களில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர முடியாதென்பது குறிப்பிடத்தக்கது. 

No comments