முளைத்தது லக்கி குறூப்?

வடமராட்சி உடுப்பிட்டியில் நாள் தோறும் அரங்கேறும் கொள்ளைகளின் பின்னணியில் லக்கி குழு எனும் போதைப்பொருள் கும்பல் உள்ளமை அம்பலமாகியுள்ளது.அதிலும் வல்வெட்டித்துறை காவல்துறையின் முழுமையான ஆசீர்வாதத்துடன் இக்குழு செயற்படுவதும் அம்பலமாகியுள்ளது.

இக்குழுவில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டினில் கைதான கும்பலை சேர்ந்த பலர் இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.

வடமராட்சி பகுதியில்  கடந்த இரண்டுவருடகாலமாக தொடர் கொள்ளைகள் பல அரங்கேற்றப்பட்டுவந்த போதும் எவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் கடந்த வாரத்தினுள் மட்டும் மூன்று வீடுகளில் இக்குழுவால் கொள்ளைகள் அரங்கேற்றப்பட்டுள்ளது.

குறிப்பாக மரணவீடுகள் மற்றும் திருமண வீடுகளினை இலக்கு வைத்து இரவு வேளைகளில் வீடு புகுந்து கொள்ளையிடுவது இக்குழுவின் பாணியாகும்.

அதிலும் வீட்டிலிருக்கும் பெண்களை கட்டிவைத்து மானபங்க படுத்துவதும் இக்குழுவின் கைங்கரியங்களில் ஒன்றாகும்.

தகவல்களை திரட்டி வெளியிடங்களிலிருந்து பாண்டியத்தம் பெற்ற கொள்ளையர்களை கொண்டுவந்து கொள்ளையிடுவது இக்கும்பலின் நடவடிக்கையென தெரியவருகின்றது.

இக்கொள்ளை கும்பலினை சேர்ந்தவர்களிடம் நவீன மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவால் வழங்கப்பட்ட கைத்துப்பாக்கிகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது.

குறிப்பாக போதை பொருள் கடத்தலில் இக்கும்பல் மும்முரமாக இருந்த போதும் அண்மைய குண்டு தாக்குதலையடுத்து அத்துறை முடங்கியிரு;பபதாக சொல்லப்படுகின்றது.

கடந்த ஒரு வாரத்தினுள் மட்டும் உடுப்பிட்டி ஆதியாமூலை மற்றும் எள்ளங்குளம் பகுதிகளிலுள்ள மூன்று வீடுகளில் பல மில்லியன் நகை கொள்ளையிடப்பட்டுள்ளது.

இக்கொள்ளைகள் தொடர்பில் காவல்துறை வெறுமனே வேடிக்கை பார்ப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளனர்.
இதனிடையே நேற்று செவ்வாய் இரவு கொள்ளையர் கும்பலை அடையாளம் கண்டு துரத்திச்சென்ற மக்களை வல்வெட்டித்துறை காவல்துறை தடுத்து அச்சுறுத்தியுள்ளதாக அப்பகுதி இளைஞர்கள் முறைப்பாடு: செய்துள்ளனர்.   

No comments