மாவையைத் தொடர்ந்து சம்பந்தனும் எச்சரிக்கை

“தமிழ் மக்களும் இலங்கையர்கள் என்றும் இலங்கையே அவர்களது நாடு என்றும் உறுதிப்படுத்தும் வகையில் ஒரே நாட்டுக்குள் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். அரசியல் தீர்வு ஏற்படுத்தப்படாத பட்சத்தில் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாததுடன் உண்மையான நாட்டைக் கட்டியெழுப்பவும் முடியாது.”

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

2009ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இறுதி நாள் விவாதம் நாடாளுமன்றில் இன்று நடைபெற்று வருகின்றது. அதில் பங்கேற்று உரையாற்றும்போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது அரசியல் தீர்வு தொடர்பில் கூறிய பல விடயங்களே தற்போது நடைமுறைப்படுத்த முயற்சிக்கப்படுகின்றன.

எனவே, இலங்கையில் அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்த தற்போது எதிர்த்கட்சித் தலைவர் பதிவியில் இருக்கும் மஹிந்த ராஜபக்ச முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

2006ஆம் ஆண்டு சர்வகட்சி கூட்டத்தில் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ச, பிரிக்கப்படாத நாட்டில் அனைத்து மக்களும் அதிகாரப் பகிர்வுடன் வாழக்கூடிய அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

2009ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்வை வழங்குவதாகவும் அவர் அறிவித்திருந்தார்.

அவரது தரப்பின் முக்கிய உறுப்பினர்களான பஸில் ராஜபக்ச, ஜீ.எல். பீரிஷ் உள்ளிட்டவர்களும் இதே நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் நியமிக்கப்பட்ட கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினாலும் அரசியல் தீர்வு சம்பந்தமான பரிந்துரைகள் அதிகாரப் பகிர்வை அடிப்படையாகக் கொண்டனவாகவே இருந்தன.

இந்த விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் ஒரே நிலைப்பாட்டில் உள்ளனர். இந்தநிலையில் விரைவாக நாட்டில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்” – என்றார்.

No comments