மலக்கழிவுகளைக் கொட்டியது பிக்கு என்பதால் மன்னிப்போம் என்கிறார் ஆர்னோல்ட்யாழ்ப்பணம் நாகவிகாரைக்கு முன்பாக உள்ள யாத்திரிகர்கள் தங்குமிட விடுதியின் மலச ல கூடத்திலிருந்து யாழ் மாநகசபையின் வெள்ள வாய்க்காலிற்குள் மலக் கழிவுகளை இட்டுவந்த யாத்திரிகர் விடுதியினரை மத ஸ்தலத்தினர் என்ற அடிப்படையில் அவர்களின் செயலை மறந்து இறுதிச் சந்தர்ப்பமாக அவர்களை மன்னிப்போம் என யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

குறித்த யாத்திரிகர் விடுதியினால் யாழ் மாநகசபையின் வெள்ள வாய்க்காலிற்குள் மலக் கழிவுகள் கொட்டப்பட்டுவந்தன. யாழ் மாநகரசபைக்கு இது தொடர்பில் பல முறை தெரியப்படுத்தியும் அவர்கள் நடவடிக்கை எடுக்க பின்னடித்ததாக தெரியவந்தது. இந்நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநக உறுப்பினர்களான பார்த்திபன், மயூரன், தனுஜன் உள்ளிட்வர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான லோகதயாளனும் அண்மையில் அப்பகுதிக்குச் சென்று குறித்த மலக்கழிவுகள் செலுத்தப்படும் குழாயினை தற்காலிகமாக அடைத்ததோடு பின்னர் யாழ் மாநகரநபை ஊடாக நிரந்தரமாக அவை அடைக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த அநாகரிகச் செயலிற்காக குறித்த விடுதியினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரி இன்று சபையில் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த பிரேரணை மீதான விவாத்தின் போதே யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட் குறித்த விடுதியினை நடத்துபவர் ஒரு பௌத்த துறவி. அவர் என்னிடம் இது தொடர்பில் வந்து கதைத்துவிட்டார். இனிமேல் அவ்வாறு நடைபெறாது என கூறியிருக்கிறார். ஒரு மத ஸ்தலத்தை நடத்துபவர் என்ற அடிப்படையில் மலக்கழிவு கொட்டியதைப் பெரிதாக்காது மன்னித்து விடுவோம் என்றார்.

அதன்போது பதிலளித்த உறுப்பினர் பார்த்திபன், இதே செயலை ஒரு சாதாரண குடிமகன் செய்தால் விட்டுவிடுவீர்களா? நல்லூர் ஆலயத்தில் வளர்க்கப்படும் மயிலிற்கு வைக்கப்பட்டிருந்த நீரில் நுளம்பு இருந்ததாக நீதிமன்றில் வழக்குத் தொடுத்தனர். சாதாரண பொது மக்களின் வீடுகளில் சிறு பாத்திரங்களில் நீர் இருந்தால் டெங்கு வந்துவிடும் என வழக்குப் போடுகிறீர்கள். யாழ் நகரின் மத்தியில் மலக் கழிவு கொட்டப்பட்டிருக்கிறது. அதனை விட்டுவிடுவோம் என்கிறீர்கள் என்றார்.

அதன்போது பதிலளித்த ஆர்னோல்ட் நீங்கள் ஒரு பௌத்த வணக்கஸ்தலத்தோடு தொடர்புபட்டது என்பதால்தான் இவ்வாறு மும்முரமாக நிற்கிறீர்கள். அவர்களை இம்முறை மட்டும் மன்னித்துவிடுவோம். இனிமேல் இவ்வாறு அநாகரிக செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்றார்.

No comments