ஜனாதிபதித் தேர்தல் இப்போதைக்கு இல்லை

ஜனாதிபதித் தேர்தலை நடத்துமாறு, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் விடுத்த கோரிக்கையை சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு செவ்வி அளித்துள்ள  அவர், அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தான் செயற்படப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

நாட்டின் அரசியலமைப்பின்படி,   பதவியேற்ற நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் ஜனாதிபதித் புதிய ஆணை கோரி,  ஜனாதிபதித் தேர்தலுக்கு அறிவிப்பை வெளியிட முடியும் என்ற நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

‘உடனடி ஜனாதிபதித் தேர்தலை  நடத்துவது பற்றி நான் தான் முடிவு செய்ய வேண்டும்.  அதனை செய்யும் திட்டம் என்னிடம் கிடையாது. ஏனையவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்பட நான் தயார் இல்லை.” என்றும் அவர் கூறியுள்ளார்.

இரண்டாவது, பதவிக்காலத்துக்குப் போட்டியிடும்  திட்டம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ள சிறிலங்கா ஜனாதிபதி, அதுபற்றி இப்போது முடிவு செய்ய முடியாது என்று பதிலளித்துள்ளார்.

“ அதுபற்றி இப்போது முடிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

கடந்த ஒரு மாதமாக நீங்கள் பார்த்தால் மணித்தியால அடிப்படையில் அரசியல் நடக்கிறது. ஊடகப் பணியாளர்களான, நீங்கள் பல  செய்திகளை வைத்திருக்கிறீர்கள். கடந்த ஐந்து வாரங்களில் இது நடந்தது.

ஒரு ஆண்டு காலத்திற்குள் என்ன நடக்கும் என்று இப்போது யார் சொல்ல முடியும்? இப்போது எதையும் நாங்கள் கூற முடியாது, “என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments