மகிந்த தலைமையில் அரசியல் ஆட்டத்திற்குத் தயாராகும் டில்ஷான்


"அன்றும் இன்றும் என்றும் மஹிந்த ராஜபக்சவின் பக்கமே நான் நிற்பேன். அவர் தலைமையில் தேர்தலில் போட்டியிடவும் தயாராகவே இருக்கின்றேன்." என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான திலகரட்ன டில்சான் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அண்மையில் உறுப்புரிமையை பெற்றுக்கொண்ட டில்சான், கொழும்பில் நேற்ற நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்படி தகவலை  வெளியிட்டார்.

” நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தீர்க்கப்படவேண்டும். அதற்கு பொதுத்தேர்தலே சிறந்த வழியாகும். கிரிக்கெட் போட்டியில்கூட இரண்டு நடுவர்களால் முடிவுக்கு வரமுடியாவிட்டால், மூன்றாம் நடுவரின் உதவி நாடப்படும்.

அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாண நிறைவேற்று, சட்டவாக்கம் ஆகிய இவ்விரு தரப்பாலும் தீர்மானமொன்றை எடுக்கமுடியாதுள்ளது. எனவே, மூன்றாம் நடுவரை (மக்களை) நாடுவதுதான் சிறந்த தீர்வாக அமையும்.

அதேவேளை, மஹிந்த ராஜபக்சவுடன் எனது அரசியல் பயணம் தொடரும். போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவர் அவர். என்றும் நான் அவருடனேயே. தேர்தலில் போட்டியிட அழைப்பு விடுக்கப்படுமானால் அதை ஏற்பேன்” என்றும் கூறினார் டில்சான்.

No comments