வர்த்தமானிகளும் இடைக்காலத் தடைகளும் இலங்கையை ஆட்சிபுரியும் வினோதம்! - பனங்காட்டான்

விசேட வர்த்தமானிகளும், நீதிமன்ற இடைக்காலத் தடையுத்தரவுகளும் இலங்கையை ஆட்சி புரிந்துகொண்டிருக்கையில், ரணிலுக்கு முண்டு கொடுக்கும் பெரும்பணியை சிரமேல் ஏற்றி பக்தி
சிரத்தையுடன் செய்துகொண்டிருக்கிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. அதேசமயம், மகிந்தவும் ரணிலும் தொலைபேசியில் இரகசிய பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

உலகில் 190 வரையான நாடாளுமன்றங்கள் உள்ளன. இதனை சனப்பிரதிநிதிகள் சபை என்றும் கூறுவர்.

சில நாடுகளில் அரச தலைவர்களாக ஜனாதிபதிகள் உள்ளனர். பலவற்றில் பிரதமர்கள் இதன் தலைவர்கள்.

மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட சபையாக நாடாளுமன்றங்கள் அமைவதால் இங்கு ஜனநாயக விழுமியங்கள் பாதுகாக்கப்பட்டு சட்டங்கள் இயற்றப்படுவதுடன், இதன் அமர்வும் நடைமுறைகளும் எழுதாத ஒரு பாடபோதனையாக மதிக்கப்படுகிறது.

ஆனால், இலங்கையைப் பொறுத்தளவில் பொதுமக்கள் தடைசெய்யப்பட்டுள்ள இடமாக நாடாளுமன்றம் மாற்றப்பட்டுள்ளது.


சபாநாயகரால் மட்டும் சபை அமர்வுகளை சட்டப்படியாகவும் நேர்த்தியாகவும் கொண்டியக்க முடியாதென்பது, கடந்த ஒரு மாதத்தில் பல தடவை நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 26க்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் எந்தச் சட்டமும் சமர்ப்பிக்கப்படவில்லை. நாடாளுமன்ற அமர்வுகள் பல தடவைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சினிமாப் பட சண்டைக் காட்சிகளை இங்கு நேரடியாகப் பார்க்க முடிந்தது.

ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதான அறிவிப்பு வெளிவருவதற்கு முன்னரே, புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்ற செய்தியை அரசாங்க ஊடகங்களான இலங்கை வானொலியும் ரூபவாகினி தொலைக்காட்சியும் அறிவித்தன.

அதன் பின்னரே ரணில் பதவி நீக்கப்பட்டார் என்பதை அப்பாவிப் பொதுசனங்கள் ஊகித்தறிய முடிந்தது.

எனினும், இரண்டு பிரதமர்கள் சமகாலத்தில் உரிமை கோரியவாறு வெவ்வேறு இடங்களில் அமர்ந்துகொண்டு அறிக்கைகளை விடத் தொடங்கினர்.

சபாநாயகர் கரு ஜெயசூரிய நாடாளுமன்ற சம்பிரதாயங்களை ஒழுக்க நெறியுடன் கடைப்பிடித்தாராயினும், நாட்டாண்மை அரசியல்வாதிகளை அவரால் அடக்க முடியவில்லை.

கடந்த ஐந்து அமர்வுகளில் இரண்டு தடவை மகிந்த மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் அவர் அசையாது இருந்தார். ஜனாதிபதி மைத்திரி அவருக்கு வீசிய சாமரம் அதற்குப் பலமாக இருந்தது.

இப்போது என்ன நடைபெறுகிறது? இதுவரை என்ன நடைபெறவில்லை!

கடந்த நாற்பது நாட்களில் ஐந்து விசேட வர்த்தமானி அறிவித்தல்களை ஜனாதிபதி மைத்திரி வெளியிட நேர்ந்தது.

ஒன்றையொன்று உரசி விளையாடும் இந்த வர்த்தமானி அறிவித்தல்கள,; அவரது அரசியல் அனுபவமின்மையைப் பறைசாற்றுகிறது.

இதன் பயனாக, இரண்டு இடைக்காலத் தடை உத்தரவுகளை நீதிமன்றங்கள் பிறப்பித்தன. இது முன்னரெப்பொழுதும் நடைபெற்றிராதது.

1978ஆம் ஆண்டு ஜனாதிபதி ஆட்சிமுறை அரசியலமைப்பை ஜே.ஆர்.ஜெயவர்த்தன உருவாக்கி, அதன் கீழான முதலாவது ஜனாதிபதியாக தம்மைத் தாமே அதற்கான கதிரையில் அமர்த்திக் கொண்டார்.

இலங்கையின் முதலாவது ஜனாதிபதி மக்களால் தெரிவுசெய்யப்படாத, சகல நிறைவேற்று அதிகாரங்களையும் கொண்டவர் என்பதை இதன்மூலம் அறிந்துகொள்ளலாம்.

முதற் கோணல், முற்றிலும் கோணல் என்பர்.

இலங்கையின் மூன்றாவது ஜனாதிபதி டி.பி.விஜேதுங்கவும் மக்களால் அப்பதவிக்குத் தெரிவுசெய்யப்பட்டவர் அல்லர். ஜனாதிபதியாகவிருந்த பிரேமதாச அகால மரணமடைய, அரசியலமைப்பு விதிகளுக்கமைய விஜேதுங்க ஜனாதிபதியாக நியமனமானார்.

அரசியலமைப்புக்கு பதினெட்டாவது திருத்தத்தைக் கொண்டுவந்து மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக முயன்ற மகிந்தவுக்கு, மக்கள் அந்த சந்தர்ப்பத்தைக் கொடுக்கவில்லை.

மகிந்தவின் கட்சி அதிக ஆசனங்களைப் பெறாத நிலையிலும், சலுகை அடிப்படையில் மைத்திரி அவரைப் பிரதமராக நியமித்ததால,; இலங்கை அரசியலில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

கடந்த நாற்பது நாட்களாக இந்தக் கவலை நாடகம் வெவ்வேறு காட்சிகளாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

ஜனாதிபதி தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தை ஒத்திவைத்ததற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு விதித்தது.

மூன்று நீதியரசர்களுடன் ஆரம்பமான இதற்கான விசாரணை, இப்போது ஏழு நீதிபதிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 7ஆம் திகதி வழங்கப்படவிருந்த இதற்கான இறுதித் தீர்ப்பு மேலும் ஒரு நாள் பின்போடப்பட்டுள்ளது.

மகிந்தவும் அமைச்சர்களும் நியமிக்கப்பட்டதை ஆட்சேபித்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் இடைக்கால தடை உத்தரவுக்கான இறுதித் தீர்ப்பு 12ஆம் திகதி வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது.

இதனை நம்பித்தான்போலும் அடுத்த ஏழு நாட்களுக்குள் (12ஆம் திகதி) சகல விடயங்களுக்கும் தம்மால் இறுதித் தீர்வு காணப்படுமென மைத்திரி அறிவித்துள்ளார்.

அரசியல் சட்டங்களை அதிகாரமாகப் பயன்படுத்த வேண்டியவர், நீதிமன்றத் தீர்ப்புகளை எதிர்பார்த்து அடுத்த கட்டத்துக்குச் செல்லக் காத்திருப்பது விந்தையானது.

இப்படியானதொரு அவலநிலை உலகில் எந்தவொரு நாட்டுத் தலைவருக்கும் வந்திருக்காது. மூன்று நாட்களுக்கு முன்னர் இப்பத்தியில் குறிப்பிட்டவாறு, மூடன் மலத்தைக் காலால் மிதித்த கதையாகவே நிகழ்வுகள் தொடர்கின்றன.

மொத்தத்தில் இன்றைய சகல நெருக்கடிகளுக்கும் ஒருவரே காரணம் - அவர் மைத்திரியே!

மைத்திரியை ஒரு பைத்தியம் என்று நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறுகிறார்.

மைத்திரியை ஒரு மனநோயாளி என்று ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜெயதிஸ்ஸ பகிரங்கமாகச் சாடுகிறார்.

மைத்திரி நன்றாகவே உள்ளார் என்று பதலளிப்பதற்கு மைத்திரி - மகிந்த தரப்பில் இதுவரை எவரும் முன்வரவில்லை.

மைத்திரியை ஜனாதிபதிப் பதவியிலிருந்து அகற்றும் ஷஇம்பீச்மன்ட்| என்னும் பிரேரணையைக் கொண்டுவர, ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் தோழன்புள்ள கட்சிகளும் முனைகின்றன.

அதற்கும் ஒரு படி மேலே சென்று, மைத்திரியின் குடியுரிமையைப் பறிக்கப் போவதாக ஜே.வி.பி. அறிவித்துள்ளது.

இதனைச் சட்டப்படி செய்ய முடியுமோ இல்லையோ, இப்படிச் சொல்வதே அப்பதவி வகிப்பவருக்கு பெரும் அவமானம்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தன தமது பதவிக் காலத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையைப் பறித்ததால், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்ததோடு, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாதும் போனது.

சிலவேளை தமக்கும் அந்த நிலை ஏற்படலாமென எண்ணுவதாற்போலும் எதிர்பாராத ஒரு முக்கிய அறிவிப்பை மைத்திரி வெளியிட்டுள்ளார்.

தம்மை அளவுக்கதிகமாக நெருக்கினால் ஜனாதிபதிப் பதவியைத் துறந்துவிட்டு தமது பொலனறுவையிலுள்ள விவசாயத் தோட்டத்துக்குச் சென்று விவசாயம் செய்யப்போதாக எச்சரிக்கை பாணியில் சொல்லியுள்ளார்.

தாங்கள் பதின்மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரியைச் சந்தித்து உரையாடியபோது அவர் மேற்கண்டவாறு கூறியதாக, மனோ கணேசன் தமது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயத் தோட்டமும் தென்னந்தோட்டமும் மைத்திரிக்கு மிக வாலாயமான இடங்கள் போலத் தெரிகிறது.

2015 ஜனவரி மாத ஜனாதிபதித் தேர்தல் நாளன்று தாம் குருநாகலையிலுள்ள தென்னந் தோட்டமொன்றில் மறைந்திருந்ததாக பல தடவை மைத்திரி கூறியது ஞாபகமிருக்கலாம்.

அத்தேர்தலில் தாம் தோல்வி கண்டிருந்தால,; மகிந்த தரப்பினர் தம்மையும் தமது குடும்பத்தினரையும் ஆறடி மண்ணுக்குள் அனுப்பியிருப்பார்கள் என்பதாலேயே தான் இவ்வாறு மறைந்திருந்ததாக விளக்கமும் கொடுத்தார்.

சில நாட்களுக்கு முன்னர் இதுபற்றிக் குறிப்பிடுகையில், அப்படியொன்றும் நடைபெறவில்லையென்றும், அரசியலில் அதிர்ச்சிக்காக அல்லது பகிடிக்காக இப்படிக் கூறுவது வழக்கமென்றும் பதிலளித்திருந்தார்.

எது உண்மை, எது பகிடி என்று சொல்ல முடியாத ஒரு முட்டாள்தனமான ஜனாதிபதி இலங்கைக்குக் கிடைத்திருப்பது அவமானத்திலும் அவமானம்.

சில வாரங்களுக்கு முன்னர,; தம்மைக் கொலை செய்வதற்கு இந்திய உதவியுடன் ரணில் திட்டம் தீட்டியதாகக் கூறியதும் இதே மைத்திரிதான்.

இன்னும் சில மாதங்கள் சென்றபின,; இதனைக்கூட பகிடிக்குச் சொன்னதாக மைத்திரி கூறமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்.

அரசியலில் இதுவெல்லாம் சாதாரணமப்பா என்று கூறித் தப்பிவிடலாமா?

இப்படியாக விசேட வர்த்தமானிகளும், நீதிமன்ற இடைக்காலத் தடையுத்தரவுகளும் இலங்கையை ஆட்சி புரிந்துகொண்டிருக்கையில், ரணிலுக்கு முண்டு கொடுக்கும் பெரும் பணியை சிரமேல் ஏற்றி, பக்தி சிரத்தையுடன் செய்துகொண்டிருக்கிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.

ரணிலை ஆதரித்ததற்கு எழுத்து மூலம் உறுதிபெறுமாறு கூறுகிறது கூட்டமைப்பின் பங்காளியான ரெலோ.

பண்டா - செல்வா ஒப்பந்தம், டட்லி - செல்வா ஒப்பந்தம், பிரபாகரன் - ரணில் ஒப்பந்தம் என்பவற்றுக்கு என்ன நடந்தது என்று தெரியாமலா ரெலோ இப்படிக் கேட்கின்றது?

ரணிலைக் கூட்டமைப்பு ஆதரிப்பதானால், எதிர்க்கட்சிப் பதவியைத் துறக்க வேண்டுமெனவும், புலிகளின் அரசியல் பிரிவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பென்றும், எதிர்க்கட்சியொன்று அரசாங்கத்தை உருவாக்க இன்னொரு கட்சிக்கு ஆதரவளிப்பது வியப்பானது என்றும் மகிந்த அணி கூட்டமைப்பைக் குற்றஞ்சாட்டுகிறது.

அதேசமயம், மகிந்தவும் ரணிலும் புதனிரவு (5ஆம் திகதி) தொலைபேசியில் முக்கிய உரையாடல் நடத்தியதாக நம்பகமான ஒரு பத்திரிகைத் தகவல்.

இரண்டு யானைகள் மோதினால் நிலத்துக்குத்தான் சேதம் என்பது உண்மையாகுமா?

No comments