சந்தர்ப்பத்தை பயன்படுத்துக:பொது அமைப்புக்கள்!


தெற்கு அரசியல் குழப்பத்தின் மத்தியில் தற்போது கிடைக்கப்பெற்றுள்ள சந்தர்ப்பத்தினை தமிழ் தேசியக்கூட்டமைப்பு உரிய வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென வடக்கிலுள்ள எட்டு பொது அமைப்புக்கள் கோரியுள்ளன.

யாழ் . பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தமிழ் சிவில் சமூக அமையம், தமிழ் சட்டத்தரணிகள் பேரவை உள்ளிட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் இன்று வெள்ளிக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் இக்கோரிக்கையினை முன் வைத்திருந்தனர்.

சட்டத்தரணியும் சிவில் செயற்பாட்டாளருமான சி.யோதிலிங்கம் மற்றும் யாழ்.பல்கலைக்கழக கலைப் பீட மாணவர் ஒன்றிய தலைவர் கிருஸ்ணமேனன் உள்ளிட்டோர் இக்கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கெடுத்திருந்தனர்.

இதனிடையே கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி மற்றும் புதிய பிரதமரை தனியே சந்திப்பதாக சொல்லப்படுகின்றமை சந்தேகத்தை தந்துள்ளது.

உண்மையில் கூட்டமைப்பினர் கட்சி நலன்களையோ, தனி நலன்களையோ முன்னிறுத்தாது தமிழ் மக்களது நலன்களை மட்டும் முன்னிறுத்தி செயற்பட வேண்டுமென அப்போது கிருஸ்ணமேனன் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை கூட்டமைப்பிடம் ஆதரவு வழங்கும் தரப்புடன் பேரம் பேச வேண்டிய 14 அம்ச கோரிக்கைகளை தாங்கள் சமர்ப்பித்துள்ளதாக ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையில் சி.யோதிலிங்கம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் சிறீலங்கா அரசாங்கத்தின் ஆட்சிப் பொறுப்பை யார் பொறுப்பேற்பது என்பது தொடர்பாக தென்னிலங்கையில்இரு பிரதான கட்சிகளுக்கிடையேயும்; கடும் போட்டி நிலவுகின்றது. இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பே வரலாற்றில் ஒரு போதும் இல்லாதவாறு தீர்மானிக்கும் சக்தியாக மேலெழுந்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அபிலாசைகள் அடங்கிய நிபந்தனைகளுடன் மட்டும் இது விடயத்தில் முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் எழுத்து மூல உத்தரவாதங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கோருகின்றோம். கால அட்டவணைகளை விதித்து அதன் அடிப்படையில் செயற்படவேண்டும் என்ற உத்தரவாதத்தை பெறுமாறும் கோருகின்றோம். 

கோரிக்கைகள்
1) தேசம், இறைமை, சுயநிர்ணயம், சமஸ்டி அடிப்படையில் அரசியல் தீர்வு காணப்படல் வேண்டும். அரசியல் யாப்பு வடிவம் வழங்கும் போது தமிழ் பிரதேச ஒருமைப்பாட்டைப் பேணக்கூடிய அதிகார அலகு, சுயாட்சி அதிகாரங்கள், கூட்டு அதிகாரத்தில் சமத்துவமான பங்கு, அதிகாரங்களுக்கான பாதுகாப்பு என்பவற்றிற்கு உத்தரவாதம் வழங்குதல் வேண்டும். அரசியல் தீர்வு வரும்வரை தமிழ் மக்கள் தங்கள் விவகாரங்களை தாங்களே பார்க்கக் கூடிய இடைகாகல நிர்வாகத்திற்கு ஒழுங்கு செய்தல் வேண்டும். 
2) பயங்கரவாதத் தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்பட்டு தமிழ் அரசியல் கைதிகள் எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும். 
3) தமிழ்ப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்ற முயற்சிகள் நிறுத்தப் படுவதோடு மகாவலி குடியேற்ற திட்டம் உடனடியாக வாபஸ் பெறப்படல் வேண்டும். 
4) படையினரால் பறிக்கப்பட்ட காணிகள் உடனடியாக விடுவிக்கப்படல் வேண்டும். 
5) வனபரிபாலனத் திணைக்களம் தொல்பொருட் திணைக்களம் என்பவற்றின் அத்துமீறல்கள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். 
6) தமிழ்ப் பிரதேசங்களில் இடைக்கால நிர்வாகம், வடமாகாண சபை, உள்;ராட்சி சபைகள் என்பவற்றினூடாக மட்டும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். 
7) தமிழ் பிரதேசங்களில் சிங்கள மீனவர்களின் ஆக்கிரமிப்பு உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். 
8) மாவட்ட அரச செயலகங்களில் அதிகாரங்கள் மீளவும் மாகாண சபைகளிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும். 
9) வடமாகாண சபை முதலமைச்சர் நிதியம் உடனடியாக அங்கீகரிக்கப்படல் வேண்டும். 
10) கல்முனை தமிழ்ப்பிரதேச செயலர் பிரிவு உடனடியாக தரமுயர்த்தப்படல் வேண்டும் என்பவை உள்ளடக்கப்பட்டுள்ளன. 

No comments