ஊடகப்படுகொலைகளிற்கு தண்டனை விலக்கா?


ஊடகங்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான நீதி விசாரணை துரிதப்படுத்தப்பட  வேண்டுமென சுதந்திர ஊடக இயக்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஊடகவியலாளர்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றச்செயல்களுக்கு தண்டனைவிலக்கு அளிக்கப்படுவதை கண்டிக்கும் சர்வதேச தினம் நவம்பர் 2ம் திகதியாகும். இம்முறை அத்தினம் இலங்கை பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றச்செயல்களுக்கு நீதி கிடைக்காத பின்னணியிலேயே அனுஷ்டிக்கப்படுகிறது. இச்சந்தர்ப்பத்தில் இதனையிட்டு சுதந்திர ஊடக இயக்கம் அதனது ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.

2000 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த 30 சம்பவங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட ஒர் ஆய்வின் படி, இக்காலப்பகுதியில் 12 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 02 பேர் காணாமலாக்கப்பட்டுள்ளனர், 03 பேர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர், 06 பேர் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர், 02 பேர் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளனர், 05 ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டோ அல்லது அழிவுகளுக்குள்ளாகியோ உள்ளன.  மோசமான நிலைமை என்னவென்றால், இந்த வழக்குகளில் எந்தவொரு குற்றவாளியையும் சட்டத்தின் மூலம்  தண்டிக்க இலங்கை அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளது என்பதாகும். 

2015 ல் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தின் பின் சில சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் பொலிஸாரினதும் சட்டமா அதிபரினதும் செயலூக்கம் அற்ற நிலையும் மற்றும் அது தொடர்பான அவர்களில் அக்கறையற்ற தன்மையும் மேலும் பல்வேறு நெருக்குதல்கள் காரணமாகவும் விசாரணைகள் தோல்வியடைந்துள்ளது என்பது எமது அவதானமாகும்.

எனவே, ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் எதிரான குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை நீதிக்குமுன் நிறுத்தி, தண்டிக்க நவடிக்கை எடுப்பதுடன், ஊடகங்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறு, ஊடகவியலார்களின் உரிமைக்காகவும் அவர்களுக்கு இழைக்கப்படும் குற்றச்செயல்களுக்கு எதிராகவும் கடந்த மூன்று தசாப்த்தங்களாக குரல் எழுப்பிவரும் ஓர் இயக்கம் என்ற ரீதியில் சுதந்திர ஊடக இயக்கம் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் மீண்டும் கேட்டுக்கொள்கிறதென இன்று அவ்வமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

No comments