திங்கள், 22 ஜனவரி 2018
Selva Zug 2

இந்தியாவின் முப்பதாவது மாநிலமாக இலங்கையை மோடி மாற்றிவிட்டாரா? பனங்காட்டான்

இலங்கையின் இன்றைய அரசின் பங்காளிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் பிளவுபடாது ஒற்றுமையாக ஆட்சி புரிய, இந்தியா கவனித்துக் கொள்ள வேண்டுமென்று இந்தியப் பிரதமர் மோடியிடம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் விடுத்த கோரிக்கை இவரால் விடுக்கப்பட்ட வேண்டுகோள்களில் உச்சமானதெனக் கூறப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலம் இலங்கை என்ற நாட்டை இரண்டு தேசங்களாகப் பிரித்துள்ள நிலைமையை கடந்த வாரக் கட்டுரையில் பார்த்தோம்.

மே மாதம் 18ம் திகதிய நிகழ்வுகளை ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், இரு தேசம் என்ற நடைமுறை வெகுதுல்லியமாக இலங்கையின் பிரதான ஊடகங்களால் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

தமிழ் ஊடகங்கள் நினைவேந்தல் வார நிகழ்வுகளை ஒளிப்படங்களாகவும், செய்திகளாகவும், விமர்சனங்களாகவும் வழங்கிக் கொண்டிருக்க, மற்றிருமொழி ஊடகங்களும் இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கைப் பயணத்தை, மழைக்குப் பிந்திய தூவானமாக தம்போக்கில் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றன.

தமிழ் மக்கள்பால் இனரீதியான சந்தேகங்களைத் தூண்டி விடுவதாக இந்த ஆய்வுகள் இடம்பெறுகின்றது.

2015ல் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட மோடி, அப்போது யாழ்ப்பாணம் செல்வதைப் பிரதான நோக்கமாகக் கொண்டு அதனைத் தமது தேவைக்கேற்ப நிறைவு செய்து கொண்டார்.

இரண்டாண்டுகள் கழித்து இந்த மாதம் மீண்டும் இலங்கை சென்ற இவர், மலையகத்துக்கு மேற்கொண்ட பயணம் பல தரப்பாலும் வித்தியாசமாக அணுகப்படுகிறது.

இவரது இலங்கைக்கான விஜயத்தை வெசாக் கொண்டாட்டத்துக்கு பிரதம அதிதியாகக் கலந்து கொள்வது மட்டுமே என இலங்கை அரசாங்கம் முதலில் அறிவித்திருந்தது.

ஆனால் டிக்கோயா சென்று அங்கு இந்திய அரசின் நிதியுதவியால் அமைக்கப்பட்ட மருத்துவமனையைத் திறந்து வைப்பாரென்று பின்னர் அறிவிக்கப்பட்டது.

அரசின் பக்கமிருக்கும் மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் தங்களின் கலரைக் காட்ட ஒருபுறத்தே முனைய, மறுபுறத்தே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது இந்தியத் தொடர்புச் செல்வாக்கை எடுத்துக்காட்ட போட்டியிட்டது.

இருதரப்பும் சுவரொட்டிப் போராட்டம் நடத்த ஆரம்பித்து தங்கள் முகங்களை மோடியுடன் இணைத்து படம் காட்டின. இறுதியில் இந்தியத் தூதரக அதிகாரிகள் தலையிட்டு இரு தரப்பையும் கட்டுப்படுத்த நேர்ந்தது.

எமது கூட்டணியின் பலமே மோடி வருகைக்குக் காரணமென்று அமைச்சர்கள் திகாம்பரம், மனோ கணேசன் ஆகியோர் மார்புதட்ட, தங்களின் முயற்சியே அனைத்துக்கும் காரணமென இ.தொ.கா.வின் தலைவர் ஆறுமுகம் தொண்டைமான் கூறி வருகிறார்.

மருத்துவமனைத் திறப்புவிழாவில் பிரதமர் மோடி நீண்டதொரு உரையை நிகழ்த்தினார். தமிழிலும் உரையாற்றினார் என்பது விசேட செய்தியாக அமைந்தது.

தமக்கும் மலையக மக்களுக்கும் உள்ள தொடர்பை மோடி பின்வருமாறு விளக்கினார்:
“நீங்கள் இந்தியாவிலிருந்து இலங்கை வந்து இந்நாட்டின் பொருளாதார பலமான தேயிலை உற்பத்தியில் பணியாற்றுகிறீர்கள். நான் சிறுவனாக இருந்தபோது புகையிரத நிலையங்களில் தேநீர் விற்று எனது தந்தைக்கு உதவினேன். ஆக, எம்மிருவருக்குமிடையிலான ஒற்றுமை தேயிலைதான்” என்று மோடி குறிப்பிட்டபோது கரவொலி மலையக முகடுகளைப் பிளந்தது.

மலையக மக்களுக்கு முன்னர் இந்தியா நான்காயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுத்ததை நினைவுபடுத்திய இவர், மேலும் பத்தாயிரம் வீடுகளை அமைத்துத் தரப்போவதாக அறிவித்தார்.

முன்னைய நான்காயிரம் வீடுகளில் அரைவாசிக்கும் மேலானவையை பெரும்பான்மை இனத்தவர் அபகரித்ததை மோடிக்கு யாராவது எடுத்துச் சொன்னார்களோ தெரியாது.

வெளிநாட்டுத் தலைவர் ஒருவர் இப்படியான பயணங்களின் பொழுது தமது விருப்பத்துக்கு ஏற்ப பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்து, தமது அரசியல் நகர்வை மேற்கொள்வது வழமையான நடைமுறையல்ல. அதனால் மோடியின் டிக்கோயாக் கூட்டமும் அரசியற் பேச்சும் மேடையிலிருந்த மைத்திரியையும் ரணிலையும் சற்று கலங்கச் செய்துவிட்டது.

இந்தக் கூட்டம் பாரதிய ஜனதாக் கட்சியின் பரப்புரைக்காக அமைந்ததாக சிங்கள ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன.

மோடியின் இலங்கைப் பயணத்தின் முக்கிய திருப்புமுனையாக சீன – இலங்கை உறவின் திடீர் மாற்ற நிலை அவதானிக்கப்படுகிறது.

மோடி நாடு திரும்பிய மறுநாள் இலங்கைப் பிரதமர் ரணில் சீனாவுக்குப் புறப்படும்போது, அந்நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் எதனையும் செய்ய வேண்டாமென்று ஜனாதிபதி மைத்திரி அவரை அறிவுறுத்தினார் என்றால், அதன் அர்த்தம், மோடியின் விருப்பத்தை மீற முடியாது இலங்கை தத்தளிக்கிறது என்பதுதான்.

தமது இலங்கை விஜயத்தின்போது, இந்தியப் பிரதமர் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் தலைமைகளை ஏனோ தவிர்த்துக் கொண்டார். முக்கிய தமிழர் தரப்பினர் பலரையும் தனித்தனியாகச் சந்தித்தார்.

மலையகத்தின் மனோ கணேசன் அணி, தொண்டமான் அணி மற்றும் சம்பந்தன் அணி என்பவற்றை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்.

மோடிக்குக் கறுப்புக்கொடி காட்ட வேண்டுமென்று அறிவித்த விமல் வீரவன்ச எங்கோ காணாமல் போய்விட்டார். ஆனால் இவரது அணியின் தலைவரான மகிந்த ராஜபக்ச, கோதபாய மற்றும் ஜி.எல்.பீரிஸ் சகிதம் 11ம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் இல்லத்தில் மோடியைச் சந்தித்துப் பேசியது மறுநாள் பரபரப்பான செய்தியானது.

மகிந்த கேட்டுக் கொண்டதாலேயே இந்தச் சந்திப்பு ஏற்படுத்தப்பட்டதாக இந்தியத் தரப்பு தெரிவித்தது.

கோதபாயவுடனும் பீரிசுடனும் மோடி எதுவுமே பேசாது மகிந்தவுடன் மட்டும் உரையாடினார் என்பது சிறப்புச் செய்தியாக வெளிவந்தது.

கறுப்புக்கொடி விவகாரம்பற்றி மகிந்தவிடம் மோடி நேரடியாகவே கேட்டபோது, தமக்குத் தெரியாது இடம்பெற்ற அறிவிப்புக்காக அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டாராம்.

இந்தியத் தூதரகம் மகிந்தவின் விருப்பத்தைத் தன்னிடம் தெரிவித்தபோது அவரது சந்திப்புக்கு தாம் சம்மதம் தெரிவித்ததாக அறிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால, கறுப்புக் கொடி காட்ட முனைந்த அணியினர் மோடியை நேரில் காணவேண்டுமெனத் தாம் விரும்பியதே இதற்குக் காரணமெனவும் கூறியுள்ளார்.

11ம் திகதி இரவு இந்தியப் பிரதமருக்கு இலங்கை ஜனாதிபதி விருந்து வழங்கி மதிப்பளித்தார். தமிழர்கள் தரப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனும் மட்டுமே இதற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

முதலமைச்சருக்கான இருக்கை இந்திய வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கருக்கு அருகிலானது. இதனால் பல விடயங்களைக் காதோடு காதாக அவருக்கு எடுத்துக்கூற தமக்குச் சந்தர்ப்பம் கிடைத்ததாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

சம்பிரதாய நிகழ்வாக முதலமைச்சரை மோடிக்கு ஜனாதிபதி மைத்திரிபால அறிமுகம் செய்தவேளை, “அவரை எனக்கு நன்கு தெரியும், நாம் பல விடயங்கள் தொடர்பாக ஏற்கனவே உரையாடியுள்ளோம்” என்று மோடி தெரிவித்து, 2015ம் ஆண்டின் யாழ் விஜயத்தை ஜனாதிபதிக்கு நினைவூட்டினார்.

மோடியின் இந்தக் கூற்று சிலவேளை மைத்திரிபால எதிர்பார்த்திராததாக அமைந்திருக்கலாம்.

12ம் திகதி மோடி நாடு திரும்புவதற்கு முன்னர் கொழும்பின் கொல்லைப்புறத்தில் (கட்டுநாயக்க விமான நிலைய அறையொன்றில்) இடம்பெற்ற ஒரு சந்திப்பு முன்னைய சந்திப்புகள் எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பானதாக அமைந்தது.

கூட்டமைப்பின் நான்கு கட்சிகளின் தலைவர்களையும் உள்ளடக்கிய குழுவை இரா.சம்பந்தன் தலைமையில் இந்தியப் பிரதமர் சந்தித்தார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் ஏற்படுத்தப்படும் நீண்ட தாமதத்தை தாம் மோடியிடம் முறையிட்டதாக சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அடுத்த இரண்டு வாரங்களில் புதிய அரசியலமைப்பு வெளிவருமென்று மே தின விழாவில் (மே 1ம் திகதி) சம்பந்தன் அறிவித்தது இப்போது ஏமாற்றத்தோடு நினைவுக்கு வருகிறது.

இது தவிர, மோடியின் கவனத்துக்கு இவரால் கொண்டு வரப்பட்ட மற்றொரு விடயம் மிகவும் சுவாரசியமானது.

“தற்போதைய அரசாங்கத்தின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்குமிடையே ஏற்பட்டுவரும் மனக்கசப்பை நீக்கி அவர்கள் தொடர்ந்து ஒன்றாக இயங்க இந்தியா கவனம் கொள்ள வேண்டும் என்பதைப் பிரதமர் மோடியிடம் தாம் கேட்டுக் கொண்டதாக சம்பந்தன் ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இதனையே இச்சந்திப்பின் உச்சம் என்று கூறினால் அதில் தவறு இருக்க முடியாது.

மூஞ்சூறு தான் போக வழியில்லையாம், விளக்குமாறையும் இழுத்ததாம் என்ற பழமொழியே இப்போது நினைவுக்கு வருகிறது.

இந்த வேண்டுகோளை மனதில் வைத்துத்தான்போலும், இலங்கை இந்தியாவின் முப்பதாவது மாநிலமாக மாறிவிட்டதா? இதற்காகத்தான் மோடி இலங்கை வந்தாரா? என்று சிங்கள வானில் பல கோணங்களிலிருந்தும் கேள்விகள் எழும்பியுள்ளன.

முகப்பு
Selva Zug 2