காசு எங்கிருந்து வருகின்றது?



தெற்கிலும் வடகிழக்கிலும் நடந்தேறிய மேதின நிகழ்வுகளில் செலவிடப்பட்ட நிதிகளின் பின்னணி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

வடகிழக்கிலும் ஏட்டிக்கு போட்டியாக மேதினங்கள் நடந்துள்ள நிலையில் தற்போது புலம்பெயர் தமிழர் முதலீடுகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் கட்சிகளின் தொழிலாளர் தினத்துக்காக அண்மையில் இடம்பெற்ற மே தினப் பேரணிகளில் கலந்துக் கொண்ட மக்கள் தொடர்பில் அரசாங்கத்தின் புலனாய்வுத் துறையினர் இரகசியமான முறையில் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மே தினப் பேரணிகளுக்காக வருகைத் தந்திருந்த மக்கள் தொடர்பில் வெளியான புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் புலனாய்வுப்பிரிவினர் அந்தந்த கூட்டங்கள் இடம்பெறும் இடங்களுக்கு சென்று சேகரித்த ஏனைய தகவல்கள் போன்றவற்றை மையப்படுத்தி ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில், இம்முறை மே தினப் பேரணிகளுக்காக அதிகளவிலான மக்கள் தொகை பங்குபற்றியிருந்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

எதிர்வரும் தேர்தல்களை மையப்படுத்தி மே தினப் பேரணிகளுக்காக அதிகளவான மக்களை வரவழைக்க அரசியல் தலைவர்கள் பாரிய முயற்சிகளில் ஈடுபட்டிருந்தமை காணக்கூடியதாக இருந்தது.

இம்முறை மே தினப் பேரணிகளுக்காக சுமார் 200 கோடி ரூபாய் செலவழிந்துள்ள நிலையில் இதில் அதிகளவான தொகை மே தினப் பேரணிகளுக்காக மக்களை வரவழைக்க செலவிடப்பட்டுள்ளது.

இந்தத் தொகை எங்கிருந்து பெறப்பட்டது என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் முன்வைத்து வருகின்றனர்.

மே தினப் பேரணிகளுக்காக இலங்கை போக்குவரத்து சபையின் 565 பேருந்துகளுக்கு கட்டணம் செலுத்தப்பட்டிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

போக்குவரத்துக்கு மேலதிகமாக வருகைத் தந்தவர்களுக்கான உணவு மற்றும் ஏனைய செலவுகளுக்காக இந்தத் தொகை செலவிடப்பட்டுள்ளது.


No comments