தெற்கு நைஜீரியாவில் படகு கவிழ்ந்து 24 பேர் உயிரிழப்பு – தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்கின்றன


தெற்கு நைஜீரியாவில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய அவசரகால மேலாண்மை முகமை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

தெற்கு நைஜீரியாவின் பேயல்சா மாநிலத்தில் உள்ள அயமா நகரிலிருந்து உகுபி பகுதிக்கு இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காகப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு, வெள்ளிக்கிழமை ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுவரை 24 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தேசிய அவசரகால மேலாண்மை முகமையின் செய்தித் தொடர்பாளர் மன்சோ எசேக்கியேல் தெரிவித்துள்ளார்.

விபத்து நிகழ்ந்தபோது படகில் எத்தனை பேர் பயணித்தனர் என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதனிடையே, விபத்து நிகழ்ந்த வெள்ளிக்கிழமையன்று நீரிலிருந்து நான்கு உடல்கள் ஆரம்பத்தில் மீட்கப்பட்டதாகவும், அவர்களில் இரண்டு பேர் குழந்தைகள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், 24 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் காவல்துறை செய்தித் தொடர்பாளர் மூசா முகமது குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் துயரச் சம்பவத்துக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ள நைஜீரிய ஜனாதிபதி போலா டினுபு, உயிரிழந்தவர்கள் இத்தகைய துயரமான முடிவைச் சந்திக்க வேண்டியவர்கள் அல்ல என்று சமூக வலைத்தளமான X-இல் பதிவிட்டுள்ளார்.

நைஜீரியாவில் ஆற்றுப் போக்குவரத்தின்போது படகு விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றுதல், முறையான பராமரிப்பின்மை மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாதது போன்றவை இத்தகைய விபத்துகளுக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

கடந்த ஆகஸ்ட் மாதம் வடமேற்கு நைஜீரியாவின் சோகோட்டோ மாநிலத்தில் நிகழ்ந்த படகு விபத்தில் குறைந்தது 51 பேர் உயிரிழந்தனர். அதேபோல், 2025 செப்டம்பரில் நைஜர் மாநிலத்தில் 100-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் பலர் உயிரிழந்தனர்.

தற்போதைய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகின்ற நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

No comments