இந்தோனேசிய மிட்டாய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து – 3 பேர் பலி, 36 தொழிலாளர்கள் மாயம்!


இந்தோனேசியாவின் பான்டென் மாகாணத்தில் அமைந்துள்ள மிட்டாய் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 36 தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர்.

தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து மேற்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செராங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஃபோனுசா அகுங் முலியா (PT Ponoosa Agung Mulia) தொழிற்சாலையிலேயே இந்தத் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

சனிக்கிழமை மதியம் தொழிற்சாலையில் திடீரென தீ பரவியதாக உள்ளூர் தேடுதல் மற்றும் மீட்பு முகமை அதிகாரி ரிஸ்கி ட்வியாண்டோ தெரிவித்துள்ளார்.

தீ விபத்தில் சிக்கி காயமடைந்த நான்கு பேர் அருகிலுள்ள மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும், 11 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்டபோது தொழிற்சாலைக்குள் சுமார் 60 பேர் இருந்திருக்கலாம் என பான்டென் மாகாண ஆளுநர் ஆண்ட்ரா சோனி தெரிவித்துள்ளார்.

தற்போது காணாமல் போன 36 தொழிலாளர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணியாளர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்தவாறு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மூன்று மாடிகளைக் கொண்ட தொழிற்சாலைக் கட்டிடத்தின் பெரும்பகுதி தீயினால் முற்றாகச் சேதமடைந்துள்ளதாகவும், சில பகுதிகளில் கட்டிடத்தின் கூரை இடிந்து விழுந்துள்ளதாகவும் ட்ரோன் காணொளிக் காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.

தொழிற்சாலையின் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள குளிரூட்டும் அறையில் முதலில் தீ ஏற்பட்டதாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், தீ விபத்துக்கான சரியான காரணம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தத் தொழிற்சாலை, பால் சார்ந்த மிட்டாய்கள் மற்றும் சிற்றுண்டிப் பொருட்களைத் தயாரிக்கும் இந்தோனேசியாவின் மில்கிட்டா (Milkyita) வர்த்தக நாமத்தின் உற்பத்தி நிலையமாகச் செயற்பட்டு வந்துள்ளது.

இதேவேளை, இந்தோனேசியாவில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் தொழிற்சாலை மற்றும் கட்டிடத் தீ விபத்துகள் பணியிடப் பாதுகாப்பு தொடர்பான கவலைகளை அதிகரித்துள்ளன.

கடந்த டிசம்பர் மாதம் ஜகார்த்தாவில் உள்ள ஏழு மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 22 பேர் உயிரிழந்தனர். ட்ரோன் மின்கல வெடிப்பே அந்தத் தீ விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது.

அதேபோன்று, 2023ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நிக்கல் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர்.

தற்போதைய மிட்டாய் தொழிற்சாலைத் தீ விபத்தில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

No comments