24 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மைக்ரோசாஃப்ட் உலகளாவிய சேவை முடக்கம் முடிவுக்கு வந்தது!


டீம்ஸ், அவுட்லுக், கோபைலட் சேவைகள் பாதிப்பு – உலகளவில் அரச நிறுவனங்கள், வர்த்தகத் துறைகள் முடக்கம்

உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களால் பரவலாகப் பயன்படுத்தப்படும் மைக்ரோசாஃப்ட் 365 மென்பொருள் சேவைகளில் ஏற்பட்ட 24 மணி நேரத்திற்கும் மேலான உலகளாவிய தொழில்நுட்ப முடக்கம் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது.

இந்தத் திடீர் சேவை முடக்கத்தினால் மைக்ரோசாஃப்ட் டீம்ஸ், அவுட்லுக், கோபைலட் உள்ளிட்ட முக்கிய செயலிகள் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் தகவல் தொடர்பு, மின்னஞ்சல் பரிமாற்றம் மற்றும் இணையவழிக் கூட்டங்களை நடத்துவதில் பெரும் இடையூறுகள் ஏற்பட்டன.

இந்தச் செயலிழப்புக்குப் பின்னால் வெளிப்புறத் தலையீடு ஏதேனும் இருந்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் இல்லை எனத் தெரிவித்துள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனம், அதன் சேவையகங்களில் (Servers) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளே இந்தப் பாதிப்புக்குக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வரலாற்றில் நீண்ட நேரம் நீடித்த சேவை முடக்கங்களில் ஒன்றாக இது கருதப்படுவதுடன், நடப்பாண்டில் அந்நிறுவனம் எதிர்கொண்ட இரண்டாவது பெரிய சேவைத் தடையாகவும் அமைந்துள்ளது.

வலைத்தளச் செயல்பாடுகளையும் இணையப் போக்குவரத்தையும் கண்காணிக்கும் ஓக்லா நிறுவனத்தின் தகவல்களின்படி, வியாழக்கிழமை சுமார் 17:25 UTC மணியளவில் இந்தச் செயலிழப்பு ஆரம்பமாகியுள்ளது. இதனால் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரச நிறுவனங்களும் வர்த்தக நிறுவனங்களும் பாதிக்கப்பட்டன.

குறிப்பாக, மின்னஞ்சல்களை அனுப்புதல், தகவல்களைப் பரிமாறுதல் மற்றும் இணையவழிக் கூட்டங்களை நடத்துதல் போன்ற அன்றாடப் பணிகள் பெருமளவில் முடங்கின.

ஜெர்மனியிலும் இந்தத் தொழில்நுட்பப் பாதிப்பு உணரப்பட்டது. அந்நாட்டின் கூட்டாட்சி டிஜிட்டல் உருமாற்றம் மற்றும் அரசாங்க நவீனமயமாக்கல் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் அன்றாடச் செயற்பாடுகளில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், ஜெர்மனியின் வர்த்தக நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையான NHS அமைப்பும் இந்தச் செயலிழப்பினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால், இணையவழியில் சேமிக்கப்பட்ட நோயாளிகளின் மருத்துவப் பதிவுகளை அணுக முடியாத நிலையில், மருத்துவப் பணியாளர்கள் காகித ஆவணங்களைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனிடையே, உலகளாவிய இணையச் சேவைப் பாதிப்புகளைக் கண்காணிக்கும் டவுன்டிடெக்டர் (Downdetector) நிறுவனத்தின் தரவுகளின்படி, இந்தச் சம்பவம் தொடர்பாக உலகளவில் 74 இலட்சத்திற்கும் அதிகமான பிரச்சினை அறிக்கைகள் பதிவாகியுள்ளன.

இந்தச் சம்பவம், அரசாங்கங்களும் வர்த்தக நிறுவனங்களும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் சேவைகளை அதிகளவில் சார்ந்திருப்பதால் ஏற்படக்கூடிய அபாயங்களை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, மைக்ரோசாஃப்ட் சேவைகளில் ஏற்பட்ட கோளாறுக்கும் அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறையைப் பாதித்த தகவல் தொடர்புத் தடைக்கும் இதுவரை தொடர்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இது தொடர்பாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது X சமூக வலைத்தளப் பதிவில், சேவை முடக்கத்திற்குக் காரணமான அடிப்படைப் பிரச்சினையைச் சரிசெய்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மற்றும் பிராந்தியங்களுக்கான சேவைகளை மீண்டும் வழமைக்குக் கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

No comments