ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் விண்கலச் சோதனை: சுற்றுப்பாதையை அடைந்த விண்கலம்; வெடித்துச் சிதறிய பூஸ்டர்!
முழுமையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் திட்டத்தில் பின்னடைவு – 26 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.
அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX), தனது பிரமாண்டமான ஸ்டார்ஷிப் (Starship) ராக்கெட்டின் இரு நிலைகளையும் மீட்டுப் பயன்படுத்தும் நோக்கில் மேற்கொண்ட சோதனை ஏவுதலில் பகுதியளவிலான வெற்றியைப் பெற்றுள்ளது.
இதன்போது, ஸ்டார்ஷிப் விண்கலத்தின் மேல் நிலை வெற்றிகரமாக விண்வெளிச் சுற்றுப்பாதையை அடைந்துள்ள போதிலும், அதனை விண்ணில் செலுத்திய பூஸ்டர் ராக்கெட்டை மீண்டும் ஏவுதளத்திற்குக் கொண்டுவந்து மீட்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளது. திரும்பி வந்துகொண்டிருந்த பூஸ்டர் மெக்சிகோ வளைகுடாவிற்கு மேலே வெடித்துச் சிதறியுள்ளது.
தொழில்நுட்பத் தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், விண்வெளிப் பயணச் செலவைக் கணிசமாகக் குறைக்கும் நோக்கில், முழுமையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் அமைப்பை உருவாக்கி வருகிறது.
இதற்காக 124 மீற்றர் (407 அடி) உயரம் கொண்ட ஸ்டார்ஷிப் ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த ராக்கெட் அமைப்பாகக் கருதப்படும் இதில், கீழ்நிலை பூஸ்டர் ராக்கெட்டும், மேல்நிலை விண்கலமும் உள்ளடங்குகின்றன.
வெள்ளிக்கிழமை தெற்கு டெக்சாஸில் அமைந்துள்ள ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்பேஸ் ஏவுதளத்திலிருந்து இந்த ஆளில்லா விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ஏவுதலுக்குப் பின்னர், மேல்நிலை விண்கலம் பூஸ்டரிலிருந்து பிரிந்து விண்வெளிச் சுற்றுப்பாதையை நோக்கிப் பயணித்தது. இதேவேளை, பூஸ்டர் மீண்டும் ஏவுதளத்திற்குத் திரும்பும் வகையில் அதன் பயணப்பாதை அமைக்கப்பட்டிருந்தது.
திட்டமிட்டபடி ஏவுதளத்தை நோக்கித் திரும்புவதற்குப் பதிலாக, பூஸ்டர் மெக்சிகோ வளைகுடாவிற்கு மேலுள்ள குறிப்பிட்ட பகுதிக்குச் சென்று வெடித்துச் சிதறியது. இந்த மீட்பு முயற்சி தோல்வியடைந்ததற்கான துல்லியமான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை.
இது தொடர்பாக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதி டான் ஹுவோட் கருத்துத் தெரிவிக்கையில், பூஸ்டரை மீண்டும் ஏவுதளத்திற்குக் கொண்டுவர முடியாமல் போனதற்கான காரணம் குறித்து உறுதியான விளக்கம் தங்களிடம் தற்போது இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், மேல்நிலை ஸ்டார்ஷிப் விண்கலம் தொடர்ந்து விண்வெளிச் சுற்றுப்பாதையில் பயணித்து, அதனுடன் எடுத்துச் செல்லப்பட்ட 26 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களையும் வெற்றிகரமாக விடுவிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த விண்கலம் சனிக்கிழமையன்று பூமிக்குத் திரும்பும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது, விண்கலத்தை ஏவுதளத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான இயந்திரக் கரங்கள் மூலம் பிடித்து மீட்க ஸ்பேஸ்எக்ஸ் திட்டமிட்டுள்ளது. பூமிக்குத் திரும்பும் ஸ்டார்ஷிப் மேல்நிலையை இவ்வாறு பிடித்து மீட்கும் முதல் முயற்சியாக இது அமையவுள்ளது.
இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஸ்டார்ஷிப் சோதனைகளில் பூஸ்டர்களை மீட்பதில் ஸ்பேஸ்எக்ஸ் ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. எனினும், முந்தைய 14 சோதனைப் பயணங்களிலும் மேல்நிலை விண்கலங்கள் கடலில் விழுந்துள்ளன.
எனவே, இந்த முறை இரு நிலைகளையும் மீட்டுப் பயன்படுத்துவதே முக்கிய இலக்காக அமைந்திருந்தது.
தற்போது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பெரும்பாலும் ஃபால்கன் (Falcon) ரக ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி வருகிறது. அவற்றின் முதல் நிலையை மீண்டும் பயன்படுத்த முடிந்தாலும், இரண்டாம் நிலையை மீட்க முடியாததால் முழுமையான மறுபயன்பாடு சாத்தியமாகவில்லை.
ஸ்டார்ஷிப் திட்டத்தின் மூலம் இந்தக் கட்டுப்பாட்டை நீக்கி, விண்வெளிப் பயணச் செலவைக் குறைப்பதே நிறுவனத்தின் நீண்டகால இலக்காகும்.
2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வாரத்திற்கு ஒரு முறை ஸ்டார்ஷிப் ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த முடியும் என எலான் மஸ்க் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்திற்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA) பல பில்லியன் டொலர்கள் நிதியுதவி வழங்கியுள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமும் இதுவரை குறைந்தது 15 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2028ஆம் ஆண்டுக்குள் விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறக்குவது இந்தத் திட்டத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும். இருப்பினும், இன்னும் தீர்க்கப்பட வேண்டியுள்ள தொழில்நுட்பச் சவால்கள் காரணமாக இந்த இலக்கை அடைவதற்கான கால அட்டவணையில் தாமதம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment