சீனா – கனடா இடையே வர்த்தக ஒப்பந்தம்: சுங்க வரிகளைக் குறைக்க இணக்கம்
அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க இரு நாடுகளும் புதிய நகர்வு – பொருளாதார, கல்வி மற்றும் சுற்றுச்சூழல் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் தீர்மானம்.
ஷென்செனில் நடைபெறவுள்ள ஆசிய–பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கும் கனடா பிரதமர் மார்க் கார்னிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான முக்கிய ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ளன.
இதன்படி, கனடாவின் பன்றி இறைச்சி, மீன் மற்றும் கடல் உணவுப் பொருட்கள் மீதான இறக்குமதி வரிகளைக் குறைக்க சீனா இணக்கம் தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலாக, சீன எஃகு மற்றும் அலுமினியப் பொருட்களுக்கு கனடா வழங்கிவரும் சுங்க வரி விலக்குகளை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடனான வர்த்தகப் பதற்றங்கள் அதிகரித்துவரும் சூழலில், இரு நாடுகளும் அமெரிக்கச் சந்தையை மட்டுமே சார்ந்திருக்கும் நிலையைத் தளர்த்தி, மாற்றுப் பொருளாதாரக் கூட்டாண்மைகளை உருவாக்க முயற்சித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாகவே சீனா – கனடா இடையிலான உறவுகளில் புதிய இணக்கப்பாடு உருவாகியுள்ளதாகக் கருதப்படுகிறது.
பேச்சுவார்த்தையின்போது கருத்துத் தெரிவித்த கனடா பிரதமர் மார்க் கார்னி, சீனாவுடனான உறவுகளில் அதிகரித்த முன்கணிப்புத்தன்மையும் ஸ்திரத்தன்மையும் ஏற்படுவது அவசியமானது எனக் குறிப்பிட்டார்.
அதேவேளை, சீனாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கு மட்டுமன்றி ஆசிய–பசிபிக் பிராந்தியத்திற்கும் ஒட்டுமொத்த உலகிற்கும் பயனளிக்கும் எனச் சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்தார்.
மேலும், இந்தத் தசாப்தத்தின் இறுதிக்குள் சீனாவுக்கான கனடாவின் ஏற்றுமதியை 50 சதவீதத்தால் அதிகரிக்கும் இலக்கை நோக்கி, எதிர்பார்த்ததைவிட விரைவான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கார்னி சுட்டிக்காட்டினார்.
இரு தலைவர்களும் பொருளாதாரம், நிதித்துறை, கல்வி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் பெய்ஜிங்கில் நடைபெற்ற சந்திப்பின்போதும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் இரு தலைவர்களும் இணக்கம் கண்டிருந்தனர். அப்போது கனடிய விவசாயப் பொருட்கள் மீதான சீனாவின் சுங்க வரிகளைக் குறைப்பதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதுடன், சீன மின்சார வாகனங்கள் கனடியச் சந்தையில் நுழைவதற்கும் வழிவகை செய்யப்பட்டிருந்தது.
எனினும், சீனாவுடனான நெருக்கமான உறவுகள் கனடாவின் தேசியப் பாதுகாப்புக்கும் ஜனநாயக விழுமியங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலைகளும் அந்நாட்டில் நிலவுகின்றன. குறிப்பாக, குறைந்தது இரண்டு கூட்டாட்சித் தேர்தல்களில் சீனா தலையிட்டதாகக் கனடியப் புலனாய்வுப் பிரிவுகள் சந்தேகம் வெளியிட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகளைச் சீனா மறுத்துள்ளது.
இத்தகைய அரசியல் மற்றும் பாதுகாப்பு முரண்பாடுகளுக்கு மத்தியிலும், பொருளாதார நலன்களை முன்னிறுத்தி இரு நாடுகளும் தமது உறவுகளைப் புதிய கட்டத்திற்குக் கொண்டுசெல்ல முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment