கிரிமியா பாலம் மீது உக்ரைன் மீண்டும் தாக்குதல் – ரஷ்யாவின் பல பகுதிகளில் 1,300 ஆளில்லா விமானத் தாக்குதல்கள்


1,300-க்கும் மேற்பட்ட உக்ரைன் ட்ரோன்களை இடைமறித்ததாக ரஷ்யா அறிவிப்பு – பதிலடியாக கீவ் நகரின் முக்கியப் பாலங்கள் மீது ரஷ்யா தாக்குதல்

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியா தீபகற்பத்தையும் ரஷ்யாவின் பிரதான நிலப்பரப்பையும் இணைக்கும் கெர்ச் பாலம் மீது உக்ரைன் திங்கள்கிழமை இரவு மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.

கெர்ச் ஜலசந்தியின் குறுக்கே அமைந்துள்ள இந்தப் பாலம், ஒரு நாளுக்கு முன்னரும் தாக்கப்பட்டதாக ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல்களைத் தொடர்ந்து பாலத்தின் ஊடான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக, ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட கிரிமியாவின் ஆளுநர் செர்ஜி அக்சியோனோவ் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

இதேவேளை, ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதும் உக்ரைன் திங்களன்று தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2022ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பை ஆரம்பித்த பின்னர், திங்களன்று ரஷ்யா எதிர்கொண்ட மிகப்பெரிய ஆளில்லா விமானத் தாக்குதல் இதுவெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலின்போது 1,300-க்கும் மேற்பட்ட உக்ரைனிய ஆளில்லா விமானங்களை இடைமறித்ததாக ரஷ்யா கூறியுள்ளது.

மேலும், செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை சுமார் 200 ஆளில்லா விமானங்களைக் கொண்டு மாஸ்கோவை உக்ரைன் இலக்குவைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாஸ்கோவை நோக்கி வந்துகொண்டிருந்த 20 ஆளில்லா விமானங்களை ரஷ்ய வான் பாதுகாப்புப் படையினர் சுட்டுவீழ்த்தியதாக அந்நகர மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் டினிப்ரோ ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள வடக்கு மற்றும் தெற்கு பாலங்கள் மீது ரஷ்யா திங்கள்கிழமை இரவு தாக்குதல் நடத்தியதாக கீவ் மேயர் விட்டாலி கிளிச்கோ அறிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல்களால் முக்கியமான உட்கட்டமைப்புகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், குடிநீர் மற்றும் வெப்பமூட்டும் விநியோகங்களிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்மாதத் தொடக்கத்திலும் ஒக்டோபர் மாதத்திலும் கீவ் நகரின் பல பாலங்கள் மீது ரஷ்யா நடத்திய தொடர் தாக்குதல்கள் அந்நகரின் போக்குவரத்து மற்றும் அத்தியாவசியச் சேவைகளில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தியிருந்தன.

இந்நிலையில், ரஷ்யா திங்கள்கிழமை இரவும் செவ்வாய்க்கிழமை அதிகாலையும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் செலென்ஸ்கி ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஏவுகணைத் தாக்குதல் எச்சரிக்கைகளை மக்கள் அவதானமாகப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்திய அவர், ரஷ்யாவின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் உக்ரைன் நியாயமான பதிலடி கொடுக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

இரு நாடுகளும் ஒன்றையொன்று இலக்குவைத்து ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகின்றமை, போர் மேலும் விரிவடையும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments