திருநெல்வேலி சிறுவர் இல்ல மாணவன் தாக்கப்பட்ட சம்பவம்: கைதான ஆசிரியருக்கு பிணை
யாழ்ப்பாணம் , திருநெல்வேலி சைவச் சிறுவர் ஆண்கள் இல்ல மாணவன் மீது தாக்குதல் நடத்திய ஆசிரியரை மூன்று இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல அனுமதித்த மன்று, வழக்கினை எதிர்வரும் 27ஆம் திகதிக்கு திகதியிட்டுள்ளது
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
சைவ சிறுவர் இல்ல மாணவர்களுக்கு இரவு நேர கற்பித்த நடவடிக்கைக்காக ஆசிரியர் ஒருவரை , இல்லத்தின் முகாமைத்துவ சபையின் அனுமதியின்றி வித்திய விருத்திச்சங்கத்தின் கல்வித்திட்டப்பணிப்பபாளரின் பரிந்துரையில் இல்லத்திற்கு முறையற்ற விதத்தில் ஆசிரியர் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியரின் தவறான நடத்தைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை முகாமைத்துவ சபையின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினர் முன் வைத்து வந்த போதிலும் , அதனை சங்க தலைவர் உள்ளிட்டவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது பொறுமை காத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் , குறித்த ஆசிரியரினால் மாணவன் ஒருவன் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டுள்ளான். ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன் தலையில் காயமடைந்த நிலையில் , 3 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள யாழ்.போதனா வைத்தியசாலை, அனுமதிக்காது , சுமார் 5 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள இணுவில் பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது
அரச வைத்தியசாலையில் மாணவனை அனுமதித்தால் , சட்ட நடவடிக்கைளுக்கு பதிலளிக்க வேண்டும் என்ற காரணத்தால் , தனியார் வைத்தியசாலையில் மாணவனை அனுமதித்து , சம்பவத்தை மூடி மறைத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் , விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார் , குறித்த ஆசிரியரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக நேற்றைய தினம் புதன்கிழமை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வாக்கு மூலங்களை பெற்றனர்.
அதனை தொடர்ந்து , ஆசிரியரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் , ஆசிரியரை 3 இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல அனுமதித்த மன்று , வழக்கினை எதிர்வரும் 27ஆம் திகதிக்கு திகதியிட்டுள்ளது.

Post a Comment