2027ஆம் ஆண்டு நடுப்பகுதியில்!





 வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய நான்கு   மாகாணசபைத் தேர்தலை2027ஆம் ஆண்டு நடுப்பகுதியில்  நடத்துவதற்கு உத்தேசித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன் மாகாணசபைத் தேர்தல் தொடர்ச்சியாக பிற்போடப்பட்டு வருகின்றமை மற்றும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவின் அறிக்கை சமர்ப்பித்தல் தாமதப்படுத்தப்படுகின்றமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்திடம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவில் ஐந்து தடவைகள் முன்னிலையாகி தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட மற்றும் நிர்வாக அலகு சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம்.

எனினும் அந்த பரிந்துரைகள்,யோசனைகளுக்கு அமைய இதுவரையில் சாதகமான தீர்மானங்கள் அல்லது உரிய நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரிடம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழு கடந்த செப்டெம்பர் மாதம் தமது விதப்புரை அறிக்கையை சமர்ப்பிப்பதாக குறிப்பிட்டது. இருப்பினும் குறித்த காலப்பகுதியில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.

செயற்குழுவின் செயற்பாட்டு பதவிக்காலம் எதிர்வரும் மாதம் 17 ஆம் திகதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமாவது செயற்குழு அறிக்கை சமர்ப்பிக்குமா என்று தேர்தல்கள் ஆணைக்குழு கேள்வியெழுப்பியுள்ளது.



No comments