நினைவேந்தலை தடுக்க முடியாது:சாட்டியில் நிச்சயம்!



யாழ்ப்பாணத்தின் தீவகத்தில் சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்ள தடைசெய்ய கோரி ஊர்காவற்துறை காவல்துறையினரால் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

வழக்கு, இன்றைய தினம் (20) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் எதிர்வரும் மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பதற்கு எதிராக தடை கோரி ஊர்காவற்துறை காவல்துறையினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இறந்த உயிர்களை நினைவுகூருவது எந்தவொரு சட்டத்தாலும் தடுக்கப்பட முடியாது என்றும், அந்த உரிமை இலங்கையினுடைய அரசியல் அமைப்பின் பிரகாரமும் சர்வதேச சட்டங்களின் பிரகாரமும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது என்றும் மாவீரர் தின ஏற்பாட்டுக்குழு சார்பில் சட்டத்தரணிகள் வாதிட்டிருந்தனர்.

அதனையடுத்து தடை செய்யப்பட்ட அமைப்புகளின் சின்னங்களையோ இலட்சினைகளையோ பயன்படுத்தாமல் இறந்தவர்களை நினைவேந்துவது சட்டவிரோதமாகாது என்று  தற்போது கட்டளையை வழங்கியிருக்கின்றது.

சாட்டி மாவீரர் துயிலுமில்லமிருந்த காணி தனது காணியென நபரொருவர் உரிமை கோரிவருவதுடன் அக்காணியினுள் மாவீpரர் தின நினைவேந்தல்களை முன்னெடுக்க தடை விதிக்க கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments