யாழ்ப்பாணத்தில் அதிகபட்சமாக 186 ?





இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

இன்று புதன்கிpழமை வெளியிடப்பட்ட காற்றுத் தரச் சுட்டெண் தரவுகளின்படி, யாழ்ப்பாணத்தில் அதிகபட்சமாக 186 ஆகவும், கிளிநொச்சியில் 170 ஆகவும், அனுராதபுரத்தில் 165 ஆகவும், சிலாபத்தில் 164 ஆகவும் பதிவாகியுள்ளது. 

மேலும், கிழக்கின் திருகோணமலை, அக்கரைப்பற்று உள்ளிட்ட பகுதிகளிலும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுகிறது. அதனால் சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் விழிப்புடன் இருந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

இலங்கைக்கு வெளியிலிருந்து வீசும் காற்று நீரோட்டங்கள் காரணமாகக் கொழும்பு, யாழ்ப்பாணம், அனுராதபுரம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் வளிமண்டலத்திலுள்ள தீங்கு விளைவிக்கும் நுண்துகள்களின் அளவு  குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிவித்துள்ளது. எதிர்வரும் சில நாட்களிலும் இந்த நிலைமை நீடிக்கக்கூடும் என்பதால், முகக்கவசங்களை அணியுமாறு சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

 தேசிய சுற்றாடல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படும் காற்றின் தரக் கண்காணிப்புத் தரவுகளின் அடிப்படையில் நிலைமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 குறிப்பாக, வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும், கொழும்பு, அனுராதபுரம், புத்தளம், திருகோணமலை மற்றும் கல்முனை ஆகிய பகுதிகளிலும் வளிமண்டலத்தில் மிதக்கும் நுண்துகள்களின் மட்டம் வேகமாக அதிகரித்துள்ளது.

தற்போது நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, உணர்திறன் கொண்டவர்கள் அநாவசியமாக வெளியில் நடமாடுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும், வெளியில் செல்வதாயின் முகக்கவசங்களைப் பயன்படுத்துவது மிகவும் உகந்தது எனவும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.


No comments