ரணிலின் கோப்புக்களும் தூசு தட்டப்படுகின்றன!



ராஜபக்சக்களின் சிறை கதைகள் அரங்கேறிவரும் நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பட்டலந்த  சித்திரவதை முகாமோடு தொடர்புடையதாகக் கூறப்படும் கொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

அவை தொடர்பான சட்டமா அதிபரின் அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகள் ஜனாதிபதியின் செயலாளருக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள சாட்சியங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாது.;கொலைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குப் புதிய விசாரணைகள் அவசியமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச உர உற்பத்தி கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான பட்டலந்த வீடமைப்புத் திட்டத்தில் இளைஞர்கள் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க 1995 செப்டம்பர் 21 அன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

12 முறை கால நீடிப்பைப் பெற்ற இந்த ஆணைக்குழு, தனது இறுதி அறிக்கையை 1998 மார்ச் 26 அன்று அப்போதைய ஜனாதிபதி சந்திரிகாவிடம் கையளித்தது.

வீடமைப்பு வளாகத்தில் உள்ள யு2ஃ2 இலக்க வீடு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 1983 முதல் 1989 ஏப்ரல் வரை இளைஞர் விவகார மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சின் விடுமுறை விடுதியாகவும், 1989 முதல் 1994 வரை கைத்தொழில் அமைச்சராக அவர் இருந்தபோது அவரது உத்தியோகபூர்வ இல்லமாகவும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.


No comments