தாய்லாந்து :இலங்கையர்க்கு கெடுபிடி!
பிக்குகள் தலைமையில் அரங்கேறிய போதைபொருள் கடத்தலை தொடர்ந்து இலங்கையர்கள் உள்ளிட்ட 60 நாடுகளின் பிரஜைகளுக்கு வழங்கி வந்த விசா சலுகைகளில் தாய்லாந்து அரசாங்கம் திருத்தங்களை கொண்டுவந்துள்ளது.
இத் திருத்தப்பட்ட புதிய விசா நடைமுறைகள் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வரவுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.
இலங்கையர்கள் உட்பட வெளிநாட்டுப் பிரஜைகள் பலர் விசா சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்தியமையே தீர்மானத்திற்கு காரணமென கூறப்படுகின்றது.
தாய்லாந்து விசா வசதியைப் பயன்படுத்திப் பயணித்த சில இலங்கையர்கள் அங்கு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டமை, போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் மற்றும் தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதப் பொருட்களைக் கடத்த முயற்சித்த பல சம்பவங்கள் அண்மைக்காலமாகப் பதிவாகியுள்ளதாக இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே செப்ரெம்பர் மாதம் 14 ஆம் திகதி தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள அமைச்சர் விஜித ஹேரத், அங்கு விசா சலுகைகளைத் தொடர்ந்து பெறுவதற்கான இருதரப்பு விசா உடன்படிக்கை குறித்தும் அங்கு உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

Post a Comment