யாழ்ப்பாணம் இந்தியாவிற்கான நுழைவாயிலா?



பாகிஸ்தானிய உளவு அமைப்பான ஜ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 13 பேர் காங்கேசன்துறையில்; கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் இந்தியாவுக்குச் செல்ல முற்பட்டபோது, 13 பேரையும் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

சந்தேகத்தின் அடிப்படையில், அவர்கள் இந்தியாவுக்குச் செல்ல அனுமதிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் இலங்கை காவல்துறையிடம்  ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட 13 பேரும் காங்கேசன்துறை காவல் நிலையத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், குறித்த நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனினும், கைது செய்யப்பட்டவர்கள் ஐ.எஸ். அமைப்புடன் உண்மையில் தொடர்புடையவர்கள் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. 

முன்னதாக யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் இந்தியா சென்ற 13 பேர், இந்தியக் குடிவரவு அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டு காங்கேசன்துறையை வந்தடைந்துள்ளனர்.

காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து நாகப்பட்டினம் துறைமுகத்திற்குப் பயணிகள் கப்பல் ஊடாகச் சென்ற 13 பேர் மீது நாகப்பட்டினத்தில் உள்ள இந்தியக் குடிவரவு மற்றும் பாதுகாப்புப் பிரிவினருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களிடம் அதிகாரிகள் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் போது, அவர்கள் இந்தியா செல்வதற்கான நோக்கம் குறித்து முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன் காரணமாக அவர்களை இந்தியாவிற்குள் அனுமதிக்க மறுத்த அதிகாரிகள், வந்த அதே கப்பலிலேயே மீண்டும் காங்கேசன்துறைக்குத் திருப்பி அனுப்பினர்.

காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்த குறித்த 13 பேரையும் இலங்கை குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் பொறுப்பேற்று விசாரணைக்கு உட்படுத்தியதாக தெரியவந்துள்ளது. 


No comments